96-வது பிறந்தநாள்: தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து


96-வது பிறந்தநாள்: தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 19 Dec 2017 9:15 PM GMT (Updated: 19 Dec 2017 9:03 PM GMT)

தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகனின் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகனின் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு, கட்சியின் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள க.அன்பழகனின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம், வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடம் ஆகிய இடங்களுக்கு தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, க.பொன்முடி, எ.வ.வேலு உள்பட பலர் வந்திருந்தனர்.

க.அன்பழகனின் பிறந்தநாளை முன்னிட்டு, மு.க.ஸ்டாலின் வாழ்த்து மடல் ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தி.மு.க.வின் பொன்னாள்

தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும், தலைவர் கருணாநிதியின் அரசியல் பயணத்தின் நெடுகிலும் உற்ற தோழராகவும், எந்த நிலையிலும் திராவிட இயக்கக் கொள்கைகளில் இருந்து இம்மியளவும் விலகாத உறுதிமிக்க மூத்த தலைவராகவும் விளங்குகிற க.அன்பழகனின் 96-வது பிறந்தநாள் தி.மு.க.வின் பொன்னாள்.

பேராசிரியர் என்கிற சொல்லுக்கேற்ப கழகம் எனும் பல்கலைக்கழகத்தில் இன்றைய இளைய தலைமுறைக்கும் இணையற்ற முறையில் கொள்கை வகுப்பெடுப்பவர்தான் க.அன்பழகன். பகுத்தறிவுச் சுடர் கொளுத்தி சனாதன இருட்டை விரட்டியடிக்கும் அவரது உறுதிமிக்க பணி, 96 வயதிலும் வேகம் குறையாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உறுதிமிக்க நிலைப்பாடு

தி.மு.க.வின் தொடக்க நாளில் இருந்து இன்றளவும் கட்சியின் வளர்ச்சிக்கான உழைப்பினை நல்கி, கட்சிக்கு நண்பர்கள் என்றால் தனக்கும் நண்பர்கள், கட்சிக்கும் தலைவர் கருணாநிதிக்கும் எதிரிகள் என்றால் தனக்கும் எதிரிகள் என்கிற உறுதிமிக்க நிலைப்பாட்டில் ஊன்றியிருப்பவர். அரசியல் ஆதாயங்களுக்காக எவர் எங்கே சென்றாலும், கட்சியின் வளர்ச்சியிலும், நெருக்கடிகளிலும் அறிவாலயமே என்றும் தமது வாழ்விடம் என்பதை கருணாநிதியின் நீங்கா நிழலாக இருந்து நிரூபித்து வருபவர்.

தலைவர் கருணாநிதியின் வழிகாட்டுதலில் வீறுநடை போடும் கட்சிக்கு, க.அன்பழகனே தத்துவ ஆசான். அவர் கற்றுத் தரும் கொள்கைப் பாடம் கட்சியின் எதிர்காலப் பயணத்திற்கு என்றென்றும் கருவூலமாகத் துணைநிற்கும். தலைவர் கருணாநிதிக்குத் தோழராகவும், கட்சி பணிகளை இன்முகத்தோடு தன் தோளில் சுமப்பவருமான க.அன்பழகன் நூறாண்டு கடந்து நலமோடு வாழ அன்புடன் வாழ்த்தி வணங்குகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story