ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவில் இருப்பது என்ன?


ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவில் இருப்பது என்ன?
x
தினத்தந்தி 21 Dec 2017 12:00 AM GMT (Updated: 20 Dec 2017 6:42 PM GMT)

ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்டார்.

சென்னை,

சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட என்று கூறி 20 வினாடிகள் ஓடக்கூடிய வீடியோ காட்சியை “பென் டிரைவ்” மூலம் சென்னை தலைமைச் செயலகத்தில் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்டார்.

அந்த வீடியோவில் காணப்படும் காட்சிகள் வருமாறு:-

ஜெயலலிதா பிரவுண் நிற இரவு உடை அணிந்தபடி வெள்ளை நிற பஞ்சு மெத்தையில், தலையணைகள் மேல் சாய்ந்த நிலையில் இருக்கிறார். அவர் பலவீனமாக காணப்படுகிறார்.

ஜெயலலிதாவின் வலது கையில் மருத்துவ சிகிச்சைக்கான “பேட்” (ரத்த அழுத்தத்தை சோதிக்கும் கருவி போன்ற ‘பேட்’) கட்டப்பட்டுள்ளது. வலது கையின் சில இடங்களிலும், வலது காலின் கீழ்ப்பகுதியில் ஓரிடத்திலும் வடுக்கள் காணப்படுகின்றன.

அவரது கழுத்தில் பச்சை நிற துணிக்கட்டு காணப்படுகிறது. இடது கையில் மூடப்பட்ட பிளாஸ்டிக் தம்ளர் உள்ளது. அதில் உறிஞ்சி குழல் சொருகப்பட்டுள்ளது. அதனுள் இருக்கும் பழச்சாறு போன்ற திரவ உணவை ஜெயலலிதா இரண்டு முறை உறிஞ்சி குடிக்கிறார்.

அவர் சாய்ந்து அமர்ந்திருக்கும் படுக்கைக்குப் பின்புலத்தில் சாய்பாபா உள்பட 3 இந்து தெய்வங்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா படுக்கையின் இடது பக்கத்தில், அவரை கவனித்துக் கொள்பவருக்கான படுக்கை போடப்பட்டுள்ளது. அதில் 4 தலையணைகள் வைக்கப்பட்டுள்ளன.

அந்தப் படுக்கையின் அருகே கண்ணாடி ஜன்னல் ஒன்று உள்ளது. அதன் வெளியே வளர்ந்த மரங்கள் காணப்படுகின்றன. அந்த ஜன்னலுக்கு அருகே இருந்த டி.வி.யை (வீடியோவில் டி.வி. தெரியவில்லை) ஜெயலலிதா உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருக்கிறார்.

‘முதல் மரியாதை’ திரைப்படத்தில் வரும் ஒரு சோக காட்சியில் இசைக்கப்படும் இசையின் ஒலியும் (நீதானா அந்தக் குயில் பாட்டின் இசை) மற்றொரு திரைப்படத்தின் பின்னணி இசையும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது. சிறிய ஜடை பின்னலுடன் ஜெயலலிதா காணப்படுகிறார்.

ஜெயலலிதாவின் வலது பக்கத்தில் இருந்து 2 கோணங்களில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ எடுக்கப்படும் திசை நோக்கி ஜெயலலிதா திரும்பிப் பார்க்கவில்லை. அவருக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட வீடியோ போல் காணப்படுகிறது. ஏனென்றால், அவரது கால்களின் கீழ்ப்பகுதி வெளியே தெரியும்படி ஜெயலலிதா காணப்படுகிறார்.

Next Story