நகைக்காக மூதாட்டியை அடித்துக் கொன்ற தம்பதி ஆழ்துளை கிணற்றில் போட்ட கொடூரம்


நகைக்காக மூதாட்டியை அடித்துக் கொன்ற தம்பதி ஆழ்துளை கிணற்றில் போட்ட கொடூரம்
x
தினத்தந்தி 21 Dec 2017 12:15 AM GMT (Updated: 21 Dec 2017 12:36 AM GMT)

நகைக்காக மூதாட்டியை அடித்துக் கொன்ற தம்பதி ஆழ்துளை கிணற்றில் போட்ட கொடூரம்

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே நகைக்காக மூதாட்டியை அடித்துக் கொன்ற தம்பதியினர் உடலை துண்டு, துண்டாக வெட்டி ஆழ்துளை கிணற்றில் போட்டனர்.

திண்டுக்கல் அருகே உள்ள என்.பஞ்சம்பட்டியை சேர்ந்தவர் சேவியர் (வயது 65). அவருடைய மனைவி இசபெல்லா (60). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த இசபெல்லா, கொசவப்பட்டியில் உள்ள தனது சகோதரர் இருதயராஜ் வீட்டில் வசித்து வந்தார்.

இருதயராஜ், தனது மனைவி, குழந்தைகளுடன் கத்தார் நாட்டில் வசித்து வருகிறார். இதனால் இசபெல்லா மட்டும் தனியாக வசித்து வந்தார். இவரது செலவுக்கு மாதந்தோறும் இருதயராஜ் பணம் அனுப்பி வைத்தார்.

ஆட்கொணர்வு மனு

இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் இசபெல்லா வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதுகுறித்து அவருடைய மற்றொரு சகோதரர் மார்ட்டின் சாணார்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இசபெல்லாவை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து அக்டோபர் மாதம் 15-ந்தேதி மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் போலீசார் இசபெல்லாவை தேடும் பணியை துரிதப்படுத்தினர். அப்போது இசபெல்லாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் செபஸ்தியார், அவருடைய மனைவி ஜோதி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

தம்பதி கைது

இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், நகைக்காக இசபெல்லாவை கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான இருவரும் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

செபஸ்தியார் (45), அவருடைய மனைவி ஜோதி (35) பலரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டனர். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

அடித்துக் கொலை

இவர்களது வீட்டுக்கு இசபெல்லா அடிக்கடி வந்து செல்வார். அப்போது அவர் அணிந்திருந்த நகைகள் இவர்களின் கண்ணில் பட்டன. தனியாக இருக்கும் இசபெல்லாவை கொலை செய்து அவர் அணிந்திருக்கும் நகைகளை விற்று கடனை அடைக்க திட்டமிட்டனர். கடந்த ஜூன் மாதம் 6-ந் தேதி வழக்கம்போல் செபஸ்தியாரின் வீட்டுக்கு இசபெல்லா சென்றுள்ளார்.

அப்போது, உருட்டுக்கட்டையால் ஜோதி அவரை சரமாரியாக தாக்கினார். இதில் நிலைகுலைந்த இசபெல்லா சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து, இருவரும் இசபெல்லாவின் உடலை துண்டு, துண்டாக வெட்டி வீட்டின் அருகே உள்ள ஆழ்துளை கிணற்றில் வீசினர். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் இருந்து கொண்டனர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

உடல் பாகங்கள் மீட்பு

பின்னர் இசபெல்லாவின் உடல் பாகங்கள் வீசப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து தோண்டி எடுக்க போலீசார் முடிவு செய்தனர். நத்தம் போலீசார் உடலை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆழ்துளை கிணறு தோண்டும் எந்திரம் மூலம், இசபெல்லாவின் உடல் பாகங்கள், எலும்புகள் சிறு, சிறு துண்டுகளாக வெளியே எடுக்கப்பட்டன. அவற்றை போலீசார் சேகரித்தனர். அவை இசபெல்லாவின் உடல் பாகங்கள்தானா? என்பதை உறுதி செய்வதற்காக உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Next Story