சனிப்பெயர்ச்சி விழாவில் புனித நீராடினர்: நளதீர்த்தத்தில் பக்தர்களால் விடப்பட்ட துணிகள் அப்புறப்படுத்தப்பட்டன


சனிப்பெயர்ச்சி விழாவில் புனித நீராடினர்: நளதீர்த்தத்தில் பக்தர்களால் விடப்பட்ட துணிகள் அப்புறப்படுத்தப்பட்டன
x
தினத்தந்தி 20 Dec 2017 8:10 PM GMT (Updated: 20 Dec 2017 8:10 PM GMT)

சனிப்பெயர்ச்சியையொட்டி புனிதநீராடிய பக்தர்களால் விடப்பட்ட துணிகள் அப்புறப்படுத்தப்பட்டு திருநள்ளாறு நளதீர்த்தம் ‘பளீச்’ என காட்சி அளிக்கிறது.

நாகை

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள சனிபகவான் தலமான தர்பாரண்யேஸ்வரசுவாமி கோவில் நேற்று முன்தினம் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி கோவில் தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அங்குள்ள நளதீர்த்தத்தில் புனித நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று சனிபகவானை தரிசனம் செய்தனர்.

ஒரேநேரத்தில் 10 ஆயிரம் பக்தர்கள் புனிதநீராடும் வகையில் குளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அடிக்கடி குளத்தில் இருந்து தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்டு புதிதாக தண்ணீர் நிரப்பப்பட்டது. பெண்கள் உடை மாற்றுவதற்கு குளத்தின் அருகே தற்காலிக அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. பாதுகாப்பு பணியில் 1,300 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக புதுவையில் இருந்து காரைக்காலுக்கு போலீசார் வரவழைக்கப்பட்டு இருந்தனர். ஆங்காங்கே பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகளும் முடுக்கி விடப்பட்டு இருந்தன.

பக்தர்களின் வருகையையொட்டி காரைக்காலில் உள்ள அனைத்து விடுதிகளும் நிரம்பி வழிந்தன. சனிப்பெயர்ச்சியையொட்டி திருநள்ளாறு கோவிலில் புனித நீராடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பினார்கள். எங்கு பார்த்தாலும் நேற்று முன்தினம் பக்தர்களின் தலைகளாகவே காணப்பட்டது.

புனித நீராடும் பக்தர்கள் தாங்கள் அணிந்திருக்கும் ஆடைகளை குளத்திலேயே விட்டுச்செல்ல வேண்டும் என்பது ஐதீகம். அதன்படி குளத்தை சுற்றி பக்தர்களால் விடப்பட்டு இருந்த துணிகளை ஆங்காங்கே மலைபோல் குவிந்து கிடந்தன. கோவில் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தொழிலாளர்கள் மூலம் அந்த துணிகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டன. இந்த நடவடிக்கையால் நளதீர்த்த குளம் ‘பளீச்’ என்று காணப்படுகிறது. தொடர்ந்து குளம் சுகாதாரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

சனிப்பெயர்ச்சிக்கு 48 நாட்களுக்கு முன்பும், பின்பும் சனிபகவானை தரிசனம் செய்ய பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன்படி வருகிற சனிக்கிழமைகளில் திருநள்ளாறுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

Next Story