ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக 28 பேர் கைது ராஜேஷ் லக்கானி தகவல்


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக 28 பேர் கைது ராஜேஷ் லக்கானி தகவல்
x
தினத்தந்தி 22 Dec 2017 1:00 AM IST (Updated: 22 Dec 2017 12:40 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலைமைத்தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.

சென்னை,

சென்னை தலைமைச்செயலகத்தில் ராஜேஷ் லக்கானி அளித்த பேட்டி வருமாறு:-

பணத்துக்கான டோக்கன் கொடுத்ததாக ஆர்.கே.நகர் வாக்குப் பதிவுக்கு முந்தையநாள் இரவில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை தேர்தல் பார்வையாளர்கள் பிடித்துக்கொடுத்தனர்.

20 ரூபாயை டோக்கனாக வாக்காளர்களுக்கு கொடுப்பார்கள். அந்த ரூபாய் நோட்டின் நம்பரை குறித்து வைத்துக்கொள்வார்கள். ஓட்டு போட்டுவிட்டு வந்து அந்த ரூபாய் நோட்டை திருப்பிக்கொடுத்தால் ரூ.10 ஆயிரம் தரப்படும். இது பணப்பட்டுவாடாவில் தற்போது வந்துள்ள டோக்கன் முறை. இதுதொடர்பாக தி.மு.க. எம்.எல்.ஏ. சுதர்சனம் புகார் கொடுத்துள்ளார்.

அந்த 15 பேரும் டி.டி.வி.தினகரன் தரப்பினர் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே 13 பேரை கைது செய்திருக்கிறோம். அதன்படி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா குற்றத்துக்காக மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் தொடர்பான புகார்கள் எதுவும் வரவில்லை. தொடக்கத்தில் மந்தமான வாக்குப்பதிவு இருந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதலாக வாக்குச்சாவடி அதிகாரி ஒருவரை நியமித்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story