சென்னையில் மெட்ரோ வட்ட ரெயில் பாதை ரூ.85 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படுகிறது


சென்னையில் மெட்ரோ வட்ட ரெயில் பாதை ரூ.85 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படுகிறது
x
தினத்தந்தி 21 Dec 2017 11:00 PM GMT (Updated: 21 Dec 2017 7:43 PM GMT)

சென்னையில் ரூ.85 ஆயிரம் கோடி செலவில் 104 ரெயில் நிலையங்களுடன் மெட்ரோ வட்ட ரெயில் பாதை அமைக்கப்படுகிறது.

சென்னை,

சென்னையில் ரூ.85 ஆயிரம் கோடி செலவில் 104 ரெயில் நிலையங்களுடன் மெட்ரோ வட்ட ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் நடந்து வருகிறது.

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க வண்ணாரப்பேட்டை- விமானநிலையம், சென்டிரல் - பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் நேரு பூங்கா- விமான நிலையம், விமான நிலையம்- சின்னமலை, ஆலந்தூர் - பரங்கிமலை இடையே சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி நடந்து வருகிறது.

3-ம் கட்டமாக மாதவரம் - சிறுசேரி (44.3 கிலோ மீட்டர், 45 ரெயில் நிலையங்கள்), 4-ம் கட்டமாக நெற்குன்றம்- மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் (15.7 கிலோ மீட்டர், 17 ரெயில் நிலையங்கள்), 5-ம் கட்டமாக சோழிங்கநல்லூர் சிப்காட் - மூலக்கடை (44.6 கிலோ மீட்டர், 42 ரெயில் நிலையங்கள்) ஆகிய புதிய வட்ட ரெயில் பாதைகள் அமைக்கப்படுகிறது. இதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கி உள்ளன.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னை மாநகரில் பல முக்கிய பகுதிகளில் மின்சார ரெயில் வசதி இல்லை. இதனால் அதிக அளவு மக்கள் மாநகர பேருந்துகளை நம்பியே உள்ளனர். 50 லட்சம் மக்கள் தொகைக்கு மேலுள்ள மாநகரங்களில் மொத்த போக்குவரத்தில் பொது போக்குவரத்தின் பங்கு 75 சதவீதமாக இருக்க வேண்டும். ஆனால் சென்னையில் இது 50 சதவீதமாக தான் உள்ளது.

இதனால் வாகனங்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அதற்கேற்ப சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே பொது போக்குவரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மெட்ரோ ரெயில் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஒரே நேரத்தில் 22 பேருந்துகளில் அல்லது ஆயிரம் இருசக்கர வாகனங்களில் செல்லும் பயணிகள் ஒரு மெட்ரோ ரெயில் மூலம் குளிர்சாதன வசதியுடன் செல்லலாம். சாலை போக்குவரத்திற்குத் தேவைப்படும் சக்தியில் 5-ல் 1 பங்கு மட்டுமே மெட்ரோ ரெயிலுக்கு தேவைப்படுகிறது. மேலும் மெட்ரோ ரெயில் போக்குவரத்தின் மூலம் சுற்றுச்சூழல் மாசும் குறைகிறது.

இதனை கருத்தில் கொண்டு தற்போது 3, 4 மற்றும் 5-ம் கட்டமாக 104.6 கிலோ மீட்டர் தூரத்தில் புதிய வட்ட ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்கான ஆய்வுப்பணிகள் நடந்து வருகிறது. இந்த மெட்ரோ வட்ட ரெயில் பாதையில் 104 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

வட சென்னையையும், தென் சென்னையையும் மெட்ரோ ரெயில் பாதை மூலம் இணைக்கும் இந்த திட்டத்தை முடிக்க 10 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று தெரிகிறது. இந்தப்பாதை அமைப்பதற்கு தரைதளத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி வரையிலும், சுரங்கப்பாதையில் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.500 கோடி முதல் ரூ.600 கோடி வரையிலும் செலவு ஆகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.

இத்திட்டத்திற்கு ரூ.85 ஆயிரத்து 47 கோடி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகையில் ஒரு பகுதியை ஜப்பானில் உள்ள அகில உலக நிதி நிறுவனம் கடனாக அளிக்கும் என்று நம்புகிறோம்.

இத்திட்டத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த திட்டத்திற்கு முறையான அனுமதி கிடைத்த உடன், ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளது. அதன் பின்னர் உடனடியாக கட்டுமான பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திட்டத்திற்கு தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்தும் போது, அதன் உரிமையாளர்களிடம் இதுகுறித்து தெரிவிப்பது தான் நீண்ட மற்றும் கடினமான செயல்முறையாகும். நிலத்தை ஒப்படைக்க விரும்பாதவர்கள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கான கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும்.

சென்னையில் நடந்து வரும் முதலாவது மெட்ரோ ரெயில் திட்டத்தை போல் இல்லாமல், 2-ம் கட்டத்தில் 80 சதவீதம் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இந்த சுரங்கப்பாதை அமையவிருக்கும் பகுதிகளில் கட்டுமான பொருட்கள், எந்திரங்கள் வைப்பதற்காக அதிக இடங்கள் தேவைப்படுவதால் தற்காலிக அடிப்படையில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப்பகுதிக்குள் செல்வதற்கான நுழைவு பாதை மற்றும் வெளியேறுவதற்கான பாதைக்கு குறைந்த அளவே இடம் எடுத்து கொள்ளப்பட உள்ளது. மின்சாரம் கொண்டு செல்வதற்காக தனியாக கட்டிடங்களும் அமைக்கப்பட உள்ளது.

முதலாவது திட்டத்தில் கட்டப்பட்டதை விட 25 சதவீதம் சிறிய அளவில் ரெயில் நிலையங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கட்டுமான செலவு, கட்டுமான மற்றும் பராமரிப்பு நேரமும் குறைகிறது. மின்சார அமைப்புகள், தகவல் தொடர்பு அமைப்புகள், கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் டிக்கெட் பெறும் வசதி போன்ற துணை அமைப்புகளுக்கான அறைகள் அமையும் இடங்களில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் ரெயில் நிலையங்களின் அளவு குறைக்கப்படுகிறது.

இந்த திட்டம் குறித்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து மாநில அரசிடம் அளிக்கப்பட்டு உள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் பொதுபோக்குவரத்தை அதிகரிப்பது மற்றும் மெட்ரோ ரெயில் மூலம் சென்னை மாநகரை இணைப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம். மாநகரின் எல்லைப்பகுதியில் வசிப்பவர்களுக்கு மெட்ரோ ரெயில் சேவை ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story