2 ஜி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் கருணாநிதிக்கு ஆ.ராசா உருக்கமான கடிதம்


2 ஜி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் கருணாநிதிக்கு ஆ.ராசா உருக்கமான கடிதம்
x
தினத்தந்தி 22 Dec 2017 4:53 AM GMT (Updated: 22 Dec 2017 4:53 AM GMT)

2 ஜி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் கருணாநிதிக்கு ஆ.ராசா உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின்  ஆட்சி காலத்தின் போது மத்திய தொலைத்தொடர்பு மந்திரியாக இருந்த ஆ.ரசா, விதிகளை மீறி அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ஒரு லட்சத்துக்கு எழுபத்து ஆறாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி என்னும் மத்திய கணக்கு தணிக்கை வாரியம் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியது. இதையடுத்து, சிபிஐ, அமலாக்கத்துறை தரப்பில் தனித்தனியாக வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்றன. இந்த வழக்கில்  சிபிஐ சார்பில் கடந்த 2011 ஆம் ஆண்டும், அமலாக்கப்பிரிவின் சார்பில் 2014 ஆம் ஆண்டும் குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

நாடு முழுவதும் மிகவும் பரபரப்புடன் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறிய சிபிஐ சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. 

இந்த நிலையில், 2 ஜி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு ஆ.ராசா உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஆ.ராசா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-  குறைகூறிய எவருக்கும் நெஞ்சம் என்ற ஒன்றே இல்லை, என்றாலும் நீதி நமக்கு கிடைத்திருக்கிறது. பொய்களோடு போராடுவதும் உண்மையை சில நேரங்களில் தேடுவதும் வெவ்வேறானவை 

தொழில்நுட்ப புரட்சியை குற்றம் என கூறி சிறைக்கு அனுப்பிய விசித்திரம் நாட்டில் நடந்துள்ளது. உண்மையை மறைப்பது, விதையை மண்ணுக்குள் புதைப்பதைப் போன்றது. நித்திரை நிலைகொள்ளாத நடுநிசியில் உங்கள் வார்த்தை ஒலிக்காக செவிகள் உண்ணாநோன்பு இருக்கின்றன. திமுகவின் அரசியல் ஆளுகையை சில இந்திய ஆதிக்க சக்திகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. 

அலைவரிசை பயணத்தில் நான் கரையாமலிருக்க பனிக்குடத்தில் வைத்து பத்திரப்படுத்திய தாய் நீங்கள். 2ஜி தீர்ப்புக்காக டெல்லி செல்கிறேன், என்று சொன்ன போது, உங்கள் உதடுகள் சரி என்று உச்சரித்தும் சப்தம் வரவில்லை என்றாலும், வலதுகரம் உயர்த்தி புன்னகையோடு வாழ்த்தினீர்கள்.  2ஜி வழக்கின் தீர்ப்பை உங்கள் காலடியில் வைத்து வணங்குகிறேன், மீண்டும் உங்களின் வாசகங்கள் என்னை வந்து வருடுகின்றன” இது போன்று  மேலும் உருக்கமான வார்த்தைகளால் ஆ.ராசா  தனது கடிதத்தை எழுதியுள்ளார்.


Next Story