சென்னை விமான நிலையம் வந்த ஜனாதிபதிக்கு முதல் அமைச்சர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
சென்னை விமான நிலையம் வந்த ஜனாதிபதியை முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
சென்னை,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று (சனிக்கிழமை) தமிழகம் வந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமேசுவரம் அருகே உள்ள மண்டபம் பகுதிக்கு சென்றார். அங்கிருந்து கார் மூலம் ராமேசுவரம் செல்லும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராமநாத சாமி கோவிலில் தரிசனம் செய்தார்.
அதைத் தொடர்ந்து பேய்க்கரும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்துக்கு சென்று அவர் மரியாதை செலுத்தினார். பின்னர், மதுரைக்கு காரில் சென்ற அவர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு விமான நிலையத்தில் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், மக்களவை துணை சபாநாயகர் தம்பி துரை உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் ராஜ்பவன் புறப்பட்டு சென்றார்.
சென்னை வருகை தந்துள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மாலை 5.45 மணிக்கு கிண்டி லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நடக்கும் 32-வது இந்தியன் என்ஜினீயரிங் மாநாட்டு நிறைவு விழாவில் அவர் பங்கேற்கிறார். இன்று இரவு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தங்குகிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை, சிலரை சந்தித்து பேசிவிட்டு, விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story