ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படுமா?


ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படுமா?
x
தினத்தந்தி 23 Dec 2017 11:30 PM GMT (Updated: 23 Dec 2017 7:15 PM GMT)

ஐகோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் 22 ஆயிரத்து 203 அரசு பஸ்கள் இயங்குகின்றன. இவற்றின் மூலம் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் தினமும் பயணம் செய்கின்றனர். இந்த பஸ்களில் 15 ஆயிரத்து 184 பஸ்கள் (68.39 சதவீதம்) பழையவை. அதாவது, சராசரி இயக்க வயதான 7.15 ஆண்டுகளை தாண்டி ஓடிக்கொண்டிருப்பவை.

விபத்துகள், பழுதாகுதல், பராமரிப்பு செலவு போன்றவற்றை தவிர்க்க வேண்டுமானால், இந்த வயதான பஸ்களை அகற்றிவிட்டு புதிய பஸ்களை விட வேண்டும். பஸ்களின் உதிரி பாகங்கள், பராமரிப்பு செலவு ஆகியவை 40 சதவீதம் அதிகரித்துவிட்டது. டீசல் விலையும் உயர்ந்துள்ளது.

இதையெல்லாம் எதிர்கொண்டு வரும் தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் நிதி நெருக்கடி 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. அதுமட்டுமல்லாமல் தினமும் ரூ.9.32 கோடி இழப்பை போக்குவரத்து கழகங்கள் சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில், போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வுகால பலன்களைக் கேட்டு தொடரப்பட்ட வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், எம்.கோவிந்தராஜ் ஆகியோர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

போக்குவரத்து கழகங்களில் நிதி இழப்பு தொடர்கதையாக உள்ளது. இதில், ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் போன்ற நெருக்கடிகளும் உள்ளன. இந்த நிலையில் போக்குவரத்து கழகங்கள் தொடர்பாக தமிழக அரசு சரியான முடிவை எடுக்காவிட்டால், அவை திவாலாகிவிடக் கூடும் என்று தெரிகிறது.

இந்த சூழ்நிலையில் பஸ் கட்டணத்தை உயர்த்துவது தேவையா? இல்லையா? என்பது பற்றி முடிவு எடுப்பது அரசின் வசம் உள்ளது. ஆனால் நிலுவையில் உள்ள ஓய்வூதிய பலன்களை வழங்குவது, கடன் உள்பட பல்வேறு நிதி நெருக்கடியை சந்தித்து வரும் போக்குவரத்து கழகங்களின் குறைகளை கவனிப்பதில் அரசு தோல்வி அடைந்துவிட்டதா? இல்லையா? என்பது பற்றி கருத்து சொல்வது கோர்ட்டின் கடமை.

2011-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட பஸ் கட்டணம், மானியம் போன்ற சொற்ப நிதிஆதாரங்களை மட்டும் வைத்துக்கொண்டு போக்குவரத்து கழகங்கள் திறம்பட செயல்பட முடியுமா? என்பதை ஆராய வேண்டும்.

தற்போதுள்ள பஸ் கட்டணம், பஸ்களின் இயக்கத்துக்கு ஆகும் செலவை ஈடுகட்டுவதற்குக்கூட போதுமானதல்ல. இந்த நிதி ஆதாரத்தை வைத்துக்கொண்டு பராமரிப்பு செலவு, கடன், இழப்புகள் மற்றும் பல பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது.

எனவே சிரமங்கள் ஏற்பட்டாலும் சரி, பஸ் கட்டணத்தை மாற்றி அமைப்பது தற்போதைய அவசிய தேவையாக உள்ளது. எனவே போக்குவரத்து கழகங்களின் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, பஸ் கட்டணத்தை மாற்றி அமைப்பதில் ஒரு சாதகமாக முடிவை எடுக்க வேண்டியது அரசின் கடமையாக உள்ளது.

அரசின் இந்த முடிவின் அடிப்படையில்தான் போக்குவரத்து கழகங்களின் சிறப்பான செயல்பாடு அமையும். இது கோர்ட்டின் கருத்து என்றாலும் சாதகமாக முடிவெடுப்பது அரசின் கையில்தான் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பஸ் கட்டணங்களை மாற்றி அமைப்பது பற்றி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த 6.12.01 அன்றும், அதற்குப் பின்னர் 18.11.11 அன்றும்தான் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. அதன் பின்னர் இதுவரை தமிழகத்தில் பஸ் கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படவில்லை. ஆனால் தென்மாநிலங்களான ஆந்திராவில் 2000-ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டுக்குள் 8 முறை கட்டணங்களை உயர்த்திவிட்டனர்.

கர்நாடகாவில் 16 முறையும், கேரளாவில் 2001-ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டுவரை 8 முறையும் அரசு பஸ் கட்டணங்களை உயர்த்தியுள்ளனர். அந்த மாநிலங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற அளவிலும், சில நேரங்களில் ஒரே ஆண்டில் இரண்டு முறை என்ற அளவிலும் பஸ் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக பஸ் கட்டண உயர்வு பற்றி அரசு சிந்திக்கவே இல்லை.

மேலும், மாற்றி அமைக்கப்பட்ட கட்டணமும் தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது. தென்மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்த்தால்தான் தமிழகத்தில் உள்ள அரசு பஸ் கட்டணங்களை பற்றிய விவரங்களை கூடுதலாக அறிந்துகொள்ள முடியும்.

2011-ம் ஆண்டு தமிழகத்தில் கட்டணங்களை மாற்றி அமைக்கும்போது, புறநகர் சாதாரண பஸ்சின் கட்டணம், ஒரு கி.மீ.க்கு 42 காசு என்ற வீதத்திலும், புறநகர் விரைவு பஸ் கட்டணம் 56 காசு என்றும், சூப்பர் டீலக்ஸ் பஸ் கட்டணம் 60 காசு என்றும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ் கட்டணம் 70 காசு என்றும், வால்வோ பஸ் கட்டணம் ஒரு கி.மீ.க்கு ரூ.1.10 என்றும் நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் அதே ஆண்டில் ஆந்திராவில் அந்தக் கட்டணங்கள் முறையே 50 காசு, 62 காசு, 70 காசு, 82 காசு, ரூ.1.40 என்ற அளவிலும்; கர்நாடகாவில் 46.44 காசு, 68.71 காசு, 83.06 காசு, ரூ.1.05, ரூ.1.38 என்ற அளவிலும்; கேரளாவில் 58 காசு, 65 காசு, 70 காசு, ஒரு ரூபாய், ஒரு ரூபாய் என்ற அளவிலும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தன.

தற்போதுள்ள பஸ் டிக்கெட் கட்டணத்தை பொறுத்தவரை தமிழகத்தில் 2011-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட அதே கட்டணத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் மற்ற மாநிலங்களில் பஸ் கட்டணம் சராசரியாக 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி ஆந்திராவில் அந்தக் கட்டணங்கள் ஒரு கி.மீ.க்கு முறையே 63.70 காசு, 87 காசு, 98 காசு, ரூ.1.16, ரூ.1.82 என்ற அளவிலும்; கர்நாடகாவில் 59 காசு, 90 காசு, ரூ.1.12, ரூ.1.31, ரூ.1.90 என்ற அளவிலும்; கேரளாவில் 64 காசு, 72 காசு, 90 காசு, ரூ.1.10, ரூ.1.30 என்ற அளவிலும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story