பிறந்தநாளையொட்டி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தலைவர்கள் நேரில் வாழ்த்து


பிறந்தநாளையொட்டி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தலைவர்கள் நேரில் வாழ்த்து
x
தினத்தந்தி 23 Dec 2017 9:00 PM GMT (Updated: 23 Dec 2017 7:29 PM GMT)

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிறந்தநாளையொட்டி அவருக்கு மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

பூந்தமல்லி,

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் 70-வது பிறந்தநாள் விழா திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மண்டப வளாகத்தில் காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் நாசே.ராமச்சந்திரன் தலைமையில் நேற்று நடந்தது.

இதில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை நேரில் சந்தித்து மலர் கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கி.வீரமணி, ப.சிதம்பரம், கே.வி.தங்கபாலு, வைகோ, நல்லக்கண்ணு, டி.கே.ரங்கராஜன் எம்.பி., திருமாவளவன், எல்.ஆர்.ஈஸ்வரன், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ், காதர்மொய்தீன், குஷ்பு உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் கலந்துகொண்டு சால்வை அணிவித்தும், நினைவு பரிசுகள் வழங்கியும் அவரை வாழ்த்தினர்.

விழாவில் ப.சிதம்பரம் பேசுகையில், “இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடு. காங்கிரஸ், திராவிட கட்சிகள், இந்தியா என்ற மைய கருத்துக்காக பணியாற்றி உள்ளன. அந்த மையக்கருத்துக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது. அதனை முறியடிக்க வேண்டும்” என்றார்.

மு.க.ஸ்டாலின் பேசும்போது, “இளங்கோவன் எதைப் பற்றியும் கவலை படாமல் மனதில் பட்டதை கூறுவதில் முதன்மையானவர். கதர் சட்டை அணிந்து இருந்தாலும் திராவிட இயக்கத்தில் தோன்றியவர். என்னை ஊக்கப்படுத்தி கொண்டு இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான இளங்கோவனுக்கு தி.மு.க. சார்பிலும், கருணாநிதி சார்பிலும் என்னுடைய சார்பிலும் வாழ்த்துகள்” என்றார்.

ஏற்புரை வழங்கி பேசிய இளங்கோவன் கூறுகையில், “கடந்த 15 நாட்களாக நடக்கும் அரசியல் நிகழ்வுகளை பார்க்கும்போது இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் மேடையாக இது அமைந்துள்ளது. ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என்று எப்படி நாம் நினைக்கிறோமோ அதேபோல் தமிழகத்தை ஆளக்கூடிய தகுதி உடைய ஒரே தலைவர் ஸ்டாலின் தான். தமிழகத்தில் உள்ள ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., ஜெயகுமார், தினகரன், சசிகலா இவர்களின் ஒட்டுமொத்த உருவம் மோடிதான். எவ்வளவு விரைவாக பதவியை விட்டு துரத்துகிறோமோ அவ்வளவு விரைவில் நமக்கு விடுதலை கிடைக்கும்” என்றார்.

Next Story