ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த முதல் தேர்தலில் அதிமுக தோல்வி
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடந்த முதல் தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவி உள்ளது.
சென்னை,
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடத்தப்பட்ட முதல் இடைத்தேர்தல் ஆர்.கே.நகர் தொகுதியாகும். இத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கிய டிடிவி தினகரன் வெற்றியை உறுதி செய்து உள்ளார். தேர்தலில் ஆளும் அ.தி.மு.க. தோல்வியை தழுவி உள்ளது. இரட்டை இலை சின்னத்துக்கு ஏற்பட்ட இந்த தோல்வி மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 2016-ம் ஆண்டு நடத்த சட்டமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடா புகாரால் தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய 2 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தவில்லை. அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அந்த 2 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இதே போல திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் மரணம் அடைந்தார்.
இதனால் 3 தொகுதிக்கும் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடந்தது.
இந்த 3 தொகுதி (தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம்) தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. தமிழ்நாட்டை பொறுத்த வரை பொதுவாக ஆளும் கட்சிதான் இடைத்தேர்தலில் வெற்றி பெறும். கருணாநிதி, ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த காலங்களில் ஆளும் கட்சி இடைத்தேர்தலில் தோல்வியை சந்தித்தது கிடையாது. சொத்து குவிப்பு வழக்கில் 2014-ம் ஆண்டு தண்டனை பெற்றதால் ஜெயலலிதா முதல்-அமைச்சர் பதவியை இழந்தார். மேல்முறையீட்டில் விடுதலையானதால் ஆர்.கே.நகர் தொகுதியில் அவருக்காக வெற்றிவேல் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
2015-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்று மீண்டும் முதல்-அமைச்சர் ஆனார்.
2016 பொதுத் தேர்தலிலும் அவர் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் இப்போது அ.தி.மு.க. தோல்வியை தழுவி உள்ளது. ஆளும் கட்சி முதல் தோல்வியை தழுவியுள்ளது. இதற்கு முந்தைய ஆட்சி காலத்தில் ஆளும் கட்சி இடைத்தேர்தலில் தோற்றது இல்லை.
Related Tags :
Next Story