‘ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியை தொடருவேன்’ டி.டி.வி.தினகரன் பேட்டி


‘ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியை தொடருவேன்’ டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 25 Dec 2017 5:30 AM IST (Updated: 25 Dec 2017 12:02 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா விட்டுச்சென்ற பணியை எம்.எல்.ஏ. என்ற அடிப்படையில் நான் தொடருவேன் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை நேற்று தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீண் நாயரிடம் இருந்து பெற்ற பின்னர் டி.டி.வி.தினகரன் நிருபர் களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஆளும் கட்சி வேட்பாளரான மதுசூதனனுக்கு மத்திய அரசு, தேர்தல் ஆணையம் தான் கூட்டணி. குறிப்பாக போலீசார் பூத் ஏஜெண்டு போல செயல்பட்டனர். மதுசூதனனின் ஆதரவாளரான ராஜேஷ் அடித்து நொறுக்கி, ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தபோது போலீஸ் கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தது. இன்னும் 2 மாதங்கள் கூட இந்த ஆட்சி தாங்குமா? என்று தெரியவில்லை. பின்னர் ஏன் போலீசார் இப்படி நடந்து கொள்கிறார்கள்?

திரும்ப, திரும்ப நான் போலீசாரிடம் சரியாக நடந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எடப்பாடி பழனிசாமி அரசு தொடரப்போவது இல்லை. இப்போது பார்த்தீர்களா? ஆகவே போலீசார் தயவு செய்து நடுநிலையோடு செயல்படவேண்டும். போலீசாரின் தற்போதைய செயல்பாடுகள் மிகவும் கண்டனத்துக்கு உரியது. எங்களுடைய முகவர்களை வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேற்ற பார்த்தார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு டி.டி.வி.தினகரன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- உங்களுடைய வெற்றியின் மூலம் என்ன மாற்றம் வரப்போகிறது?

பதில்:- பொறுத்திருந்து பாருங்கள். இப்போதுதானே வெற்றி வந்திருக்கிறது. கடந்த ஒரு மாத காலமாக நான் கொடுத்த பேட்டிகளின் அடிப்படையில் பாருங்கள் நான் சொன்னது அனைத்தும் நடந்திருக்கிறது.

கேள்வி:- சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். மீண்டும் இரட்டை இலை சின்னம் உங்களுக்கு கிடைக்குமா?

பதில்:- இரட்டை இலை எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட சின்னம். ஜெயலலிதாவால் கட்டி காக்கப்பட்ட சின்னம். அது எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவிடம் இருக்கும்போது வெற்றி சின்னம். எம்.ஜி.ஆர். படத்தில் வரும் வில்லன்களான எம்.எம்.நம்பியாரிடமும், பி.எஸ்.வீரப்பாவிடம் இருந்தால் அதற்கு மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்? சில வேலைகளை செய்யவில்லை என்றால் டெபாசிட் போயிருக்கும். ஆளும் கட்சி என்பதால் தப்பித்து வந்துவிட்டார்கள்.

கேள்வி:- எம்.எல்.ஏ.க்கள் உங்கள் பக்கம் வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? தற்போது வர தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறதே.. வேலூர் எம்.பி. செங்குட்டுவன் வந்திருக்கிறாரே...

பதில்:- நான் முன்னரே சொல்லியிருக்கிறேன்... போயிட்டு வந்துவிடுவேன் என்று சொல்லிவிட்டுதான் அவர்கள் சென்றார்கள். பொய்யாகவோ, பந்தாவுக்காகவோ நான் எதையும் சொல்லமாட்டேன். 80 சதவீதம் வாக்குப்பதிவு இருந்தால், 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று முன்பு கூறினேன். ஆகையால் டெபாசிட் போய்விடும் என்று நம்ம அண்ணாச்சிகள் 33 அமைச்சர்கள், முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் எல்லோரும் சேர்ந்து ஏதோ செய்தார்கள். நான் அவர்கள் செய்யட்டும் என்று விட்டுவிட்டேன். ஏழை-எளிய மக்களுக்கு அவர்கள் பணம் வந்து சேர்ந்திருக்கிறது. அதை வாங்கிக்கொள்ளட்டும் என்று கூறினேன். அது மட்டும் இல்லை என்றால் என்னுடைய வெற்றி மாபெரும் வெற்றியாக அமைந்திருக்கும்.

கேள்வி:- ஆர்.கே.நகர் மக்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அடிப்படையில், உங்களுடைய பணி சட்டமன்றத்தில் எந்த வகையில் இருக்கும்?

பதில்:- ஜெயலலிதாவின் தொகுதி அது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவர் வழியில் நடக்கும் என்னை, தொகுதி மக்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். ஜெயலலிதா விட்டுச்சென்ற பணியை தொடர்ந்து செய்வதற்காக, எம்.எல்.ஏ. என்ற அடிப்படையில் என்னுடைய பணிகளை தொடருவேன்.

கேள்வி:- ஆட்சி மாற்றம் வருமா?

பதில்:- நான் ஏற்கனவே கூறிய அனைத்தும் நடக்கும். அரசாங்கமே ஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்து போலீசார் உதவியுடன் அதிகார துஷ்பிரயோகம் செய்தார்கள். திங்கட்கிழமையில் (இன்று) முதல் பாருங்கள். நாங்கள் யாரையும் சும்மா விடப்போவது இல்லை. மண் குதிரைகளை நம்பி போலீசார் இறங்க வேண்டாம். நாங்கள் தீவிரமாக கொண்டு சென்றால் கோர்ட்டில் மாட்டிக்கொள்வீர்கள். காவல் துறை ஏவல் துறை போன்று ஏன் செயல்படுகிறீர்கள்? ஆர்.கே.நகர் தொகுதியில் படித்தவர்களை விடவும், சாமானிய மக்கள் தான் அதிகம். அவர்கள் ஒவ்வொன்றையும் பார்த்து எனக்கான வாக்கு எண்ணிக்கையை அதிகரித்து தந்திருக்கிறார்கள்.

கேள்வி:- மிகப்பெரிய கூட்டணியுடன் சந்தித்த தி.மு.க. ‘டெபாசிட்’ இழந்திருக்கிறதே...

பதில்:- மக்கள் தீர்மானிப்பதால் ‘டெபாசிட்’ இழப்பது நடக்கத்தான் செய்யும். நான் 58 பேரும் டெபாசிட் இழப்பார்கள் என்று நினைத்தேன். ஒரு ஆள் தப்பித்தோம், பிழைத்தோம் என்று அதனை தாண்டிவிட்டார். என்னை எதிர்க்கிறவர்கள் தோற்பார்கள் என்று நான் முன்னரே கூறியிருந்தேன். மக்களுடைய நாடித்துடிப்பு எங்களுக்கு தெரியும். 60 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்று நினைத்தேன். சில காரணங்களில் 50 சதவீதம் தான் கிடைத்திருக்கிறது.

கேள்வி:- ‘டெபாசிட்’ கூட வாங்கமாட்டார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினாரே...

பதில்: எங்கள் கட்சியில் நான் முன்னாடி நிற்கிறேன், எல்லோரும் சேர்ந்து என்னை முன்னிலைப்படுத்தியிருக்கிறார்கள். எங்கள் தலைமை செயல்படமுடியாத இடத்தில் இருக்கிறார். அதனால் நான் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறேன். எந்த முடிவு என்றாலும் என்னை விடவும் வயதில் மூத்தவர்கள், அனுபவம் மிகுந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பேன். கடைசியாக பொதுச்செயலாளரின் முடிவின்படியே ஒவ்வொரு நடவடிக்கையும் இருக்கும். நானாக எந்த முடிவும் எடுக்கும் சுபாபம் எனக்கு கிடையாது. அ.தி.மு.க. ஜனநாயக கட்சி. சாதாரண தொண்டனான என்னை தோளில் தூக்கி வைத்திருக்கிறார்கள்.

கேள்வி:- ஆர்.கே.நகர் தேர்தலின்போது நீங்கள் சந்தித்த இடையூறுகள் என்ன?

பதில்:- ஒவ்வொரு நேரமும் நான் இடையூறுகளைதான் சந்தித்தேன். எங்கோ குக்கர் சென்றாலும் நான் கொடுத்ததாக சொல்வார்கள். ரூ.20 நோட்டு ‘டோக்கன்’ கொடுத்து பணம் பெறுவதாக வந்த குற்றச்சாட்டும் பொய். அதனை எப்படி வாக்காளர்கள் நம்புவார்கள்? ரூ.6 ஆயிரம் கொடுத்தவர்கள் தான் திருடர்கள். ஒரு வாக்காளருக்கு ரூ.20 நோட்டு கொடுத்து அடுத்த வாரம் பணம் தருகிறேன் என்று சொன்னால் எப்படி ஒப்புக்கொள்வார்?

கேள்வி: எதிர்க்கட்சி தலைவர்கள் ஆர்.கே.நகரில் ஜனநாயகம் வெல்லவில்லை, பணநாயகம் வென்றிருக்கிறது? என்று கூறியிருக்கிறார்களே..

பதில்:- தோற்கும் கட்சி தெரிவிக்கும் கருத்துகளுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை.

கேள்வி:- பா.ஜ.க.வை விட ‘நோட்டா’ அதிக வாக்குகள் பெற்றது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனிடம் தான் கேட்கவேண்டும். ‘நோட்டா’வுக்கு அதிக பணம் கொடுத்து யாரும் போட சொல்லிவிட்டார்களோ என்னவோ....

கேள்வி:- உங்களுடைய அரசியல் எதிரிகளுக்கு எந்தவிதமான பிரஷரை(அழுத்தத்தை) கொடுக்கமுடியும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்:- எங்களுடைய எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் ‘பிளட் பிரஷர்’(ரத்த அழுத்தம்) எகிறும் என்று சின்னம் வாங்கியதும் சொன்னேன். அது தற்போது நடந்திருக்கிறது.

கேள்வி:- உங்கள் ஸ்லீப்பர் செல்ஸ் ‘ஆக்டிவேட்’ ஆவார்களா?

பதில்:- எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வரும்போது ஸ்லீப்பர் செல்கள் அனைத்தும் ‘டக்’குனு பேட்டரி போட்டதுபோல எழுந்திருத்து நிற்பார்கள். சசிகலாவின் தலைமையில் 3-வது அத்தியாயத்தை ஆர்.கே.நகர் மக்கள் தொடங்க இருக்கிறார்கள். அ.தி.மு.க.வின் 3-வது அத்தியாயம் ஆர்.கே.நகரில் மக்களால் தொடங்கும். மறக்க முடியாத வெற்றியை தந்த ஆர்.கே.நகர் மக்களை நானும், எங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் ஒருபோதும் மறக்கமாட்டோம்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

முன்னதாக டி.டி.வி.தினகரன் மதுரை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வாக்கு எண்ணும் மையத்தில், தோல்வி பயத்தின் விரக்தியால் தான் மதுசூதனன் ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் 3 மாதத்தில் தற்போது உள்ள எடப்பாடி ஆட்சி கவிந்துவிடும். புரட்சித்தலைவி அம்மா வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் யார் வெற்றி பெறுவது என்பதை மக்கள் நன்றாக முடிவு செய்து, புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர். நினைவு நாளில் சுயேச்சை வேட்பாளரான என்னை வெற்றி பெற செய்துள்ளனர்.

இவ்வாறு டி.டி.வி தினகரன் கூறினார்.

Next Story