தந்தையை இழந்த 251 பெண்களுக்கு ஒரே மேடையில் திருமணம்


தந்தையை இழந்த 251 பெண்களுக்கு ஒரே மேடையில் திருமணம்
x
தினத்தந்தி 25 Dec 2017 5:46 AM GMT (Updated: 25 Dec 2017 5:45 AM GMT)

குஜராத்தில், தந்தையை இழந்த 251 பெண்களுக்கு தொழிலதிபர் ஒருவர் மிகவும் பிரமாண்டமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மகேஷ் சவானி. கடந்த 5 ஆண்டுகளாக ஏழைப் பெண்களை பார்த்து அவர்களுக்கு திருமணம் நடத்திவைத்து வருகிறார். இந்நிலையில் தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாகவும் தனது அந்த நற்செயலை அவர் தொடர்ந்துள்ளார். 6-வது ஆண்டான இந்த வருடத்தில் தந்தையை இழந்த 251 பெண்களுக்கு அவர் திருமணம் செய்து வைத்திருக்கிறார்.திருமணம் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் தினத்தின் போது நடைபெற்று வருவதாகவும், திருமண ஜோடிகள் தங்கள் உடல் முழுவதும் வண்ணமயமான ஆபரணங்களை அணிந்து கொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த திருமணத்தை செய்து வைப்பதற்கு முக்கிய காரணம் கடந்த 2008-ஆம் ஆண்டு அவரது ஊழியர் ஒருவர், தனது மகள் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் இறந்துவிட்டதாகவும், இதைக் கண்ட அவர் அதன் பின் இது தொடர்பாக தொண்டு நிறுவனத்தை நிறுவியதாக கூறப்படுகிறது.

இதில் இந்து மதத்தினர் மட்டுமின்றி கிறிஸ்தவர், இஸ்லாமிய மதங்களை சேர்ந்த பெண்களும் அடங்குவார்கள். 251 பெண்களில் ஒருவர் மாற்றுத்திறனாளி ஆவார். திருமணத்தை நடத்தி வைத்ததோடு மட்டுமின்றி ஒவ்வொரு பெண்ணுக்கு தலா 5 லட்சம் ரூபாய் செலவில் சீர்வரிசைகளையும் தொழிலதிபர் மகேஷ் சவானி வழங்கியுள்ளார். தந்தை இழந்து பணம் இல்லாமல் கஷ்டப்படும் பெண்களுக்கு திருமணம் செய்துவைப்பதன் மூலம் தனக்கு மிகுந்த மனநிறைவு ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார்.இந்த திருமணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திருமண ஜோடிகளை வாழ்த்தினர்.

இது குறித்து மகேஷ் சவானிகூறுகையில், இதை நான் ஒரு தந்தை பொறுப்பில் இருந்து எடுத்துக் கொள்கிறேன், ஒரு தந்தை என்ன எல்லாம் செய்ய முடியுமோ அதை தான் செய்ய முயற்சி செய்கிறேன், இந்தியாவில் ஒரு மகள் தனது தந்தையை இழந்துவிட்டால், அவளது திருமணம் என்பது கேள்வி குறியாகிறது, அதற்காக குடும்பத்தினர் பெரிதும் கஷ்டப்படுகின்றனர், இதை நான் தொடர்ந்து செய்வேன்.

Next Story