அரசியலுக்கு வருவதாக அறிவிப்பு: ரஜினியின் சொந்த கிராமத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


அரசியலுக்கு வருவதாக அறிவிப்பு: ரஜினியின் சொந்த கிராமத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 31 Dec 2017 10:45 PM GMT (Updated: 2018-01-01T00:57:11+05:30)

அரசியலுக்கு வருவதாக ரஜினி அறிவித்ததால் அவருடைய சொந்த கிராமத்தில் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் ஆரவாரமாக கொண்டாடினர்.

கிருஷ்ணகிரி,

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக நேற்று அறிவித்தார். இதை வரவேற்று தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ரஜினிகாந்தின் சொந்த கிராமமான நாச்சிக்குப்பத்தில் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் ஆரவாரமாக கொண்டாடினார்கள்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

நாச்சிக்குப்பம் பகுதியில் சவுராஷ்டிரா மொழி பேசக்கூடிய மராட்டியர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். இந்த கிராமம் தான் ரஜினிகாந்தின் தாய், தந்தையின் சொந்த கிராமமாகும். ரஜினியின் தாத்தா, பாட்டி இங்கே தான் பிறந்து வாழ்ந்தார்கள். ரஜினியின் தந்தை இந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்து பிழைப்புக்காக பெங்களூரு சென்றார்.

அங்கு அவருக்கு திருமணம் நடந்து பிள்ளைகள் பிறந்தன. சிறுவயதில் ரஜினிகாந்த் இந்த கிராமத்திற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அவரது உறவினர்கள் சிலர் இன்னும் சிலர் இங்கு வசிக்கிறார்கள். வருகிற சட்டமன்ற தேர்தலில் அவருடைய பூர்வீக கிராமமான நாச்சிக்குப்பம் கிராமத்திற்குட்பட்ட வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் அவர் போட்டியிட வேண்டும்.

ரஜினி அரசியலுக்கு வருவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருடைய சொந்த கிராமத்துக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story