உலகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம் 2018-ம் ஆண்டு பிறந்தது தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து


உலகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம் 2018-ம் ஆண்டு பிறந்தது தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து
x
தினத்தந்தி 1 Jan 2018 12:15 AM GMT (Updated: 31 Dec 2017 8:11 PM GMT)

2017 ஆண்டு முடிந்து 2018-ம் ஆண்டு பிறந்தது.புத்தாண்டு பிறப்பு உலகம் முழுவதும் கோலாகலாமாக கொண் டாடப்பட்டது.

சென்னை,

புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

வாழ்த்து செய்தியின் விவரம் வருமாறு:-

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்:-

புத்தாண்டு பிறப்பதையொட்டி தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த நன்னாளில் நம்மிடையே ஒற்றுமை உணர்வு மேலோங்க வேண்டும். நல்லிணக்கம் மற்றும் நட்புறவுடன் நாம் திகழும்போது, அது வளர்ச்சியாக அமையும். அந்த ஒற்றுமை நமது வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் மேம்படுத்தும். மக்களாகிய நம் அனைவரின் செயல்பாடும் நாட்டின் அமைதி, உறுதி மற்றும் வளத்துக்கு வித்திடுவதாக அமையட்டும். அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-

புதுப்பொலிவுடன் புத்தாண்டு புலர்கின்ற இந்த இனிய நாளில், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ‘மக்கள் அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தமிழக அரசு திட்டங்களைத் தீட்டி, அவற்றைச் செயல்படுத்தி, இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கவும், பெண்களுக்காகப் பல நலத்திட்டங்களை உருவாக்கி செயலாக்கவும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் எவருமே இருக்கக் கூடாது என்ற லட்சியத்தை நிறைவேற்றிடவும் அயராது பாடுபடுவதே எனது குறிக்கோள்’, என்று ஜெயலலிதா உறுதியேற்று, தமிழக வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டார்.

தமிழக மக்களின் வாழ்வு வளம் பெறவும், அவர்களின் நலனை பேணிப் பாதுகாக்கவும், ஜெயலலிதா வழியில் செயல்படும் அரசு செயல் படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் அனைவரும் முறையாக பயன்படுத்தி, வளமிக்க தமிழகத்தை படைத்திட ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும் என்று இப்புத்தாண்டில் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தப் புத்தாண்டு புதிய நலன்களையும், வளங்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, என் அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

என்னதான் எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் முடிந்தாலும், புதிய நம்பிக்கைகளுடன் புதிய முயற்சிகளை தொடங்குவதுதான் மனித இயல்பு. அந்தவகையில் எண்ணற்ற ஏமாற்றங்களை வழங்கிய 2017-ம் ஆண்டு முடிந்து, 2018-ம் ஆண்டு பிறப்பதை வரவேற்கும் வகையில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். புதிய ஆண்டை ஊழல் எதிர்ப்பு ஆண்டாக பா.ம.க.வுடன் மக்களும் கடைபிடிக்க வேண்டும். புத்தாண்டு நன்மைகளையும், நம்பிக்கைகளையும் மட்டுமே நமக்கு வழங்க போகிறது. அந்த நம்பிக்கைகளுடன் தமிழகத்தில் மாற்றம், முன்னேற்றத்தை அடைய இப்போது இருந்தே நாம் உழைக்க சபதம் ஏற்கவேண்டும்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

ஜனநாயகம் வழங்கியுள்ள வலிமையான ஆயுதமான வாக்குச்சீட்டை பணத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் பலியாக்கி விடாமல், வாக்குரிமையை பயன்படுத்தும் கடமை ஆற்றிட தமிழக வாக்காளர்கள் இப்புத்தாண்டு நாளில் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். இருளுக்கு பின்னர் வெளிச்சம், பனிக்காலத்துக்கு பின்னர் வசந்தம் என்ற உணர்வோடு, நம்பிக்கை கொண்டு தமிழக மக்களுக்கு ம.தி.மு.க. சார்பில் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-

புத்தாண்டு உலக மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும் விதமாக அமையவேண்டும். இந்த புதிய ஆண்டு இந்தியர்களாகிய நமக்கெல்லாம் நற்பயன்களை தரும் என்ற நம்பிக்கையோடு இனிதே வரவேற்போம். மக்கள் அனைவரும் புத்துணர்ச்சியோடு புதுப்பொலிவோடு வாழ நல்வழிகள் அமையவேண்டும். புத்தாண்டை இன்முகத்தோடு வரவேற்று, மகிழ்ச்சியோடு கொண்டாடி நல்லெண்ணத்தோடு வரும் நாட்களில் நல்லதையே செய்வோம். பயன்பெறுவோம், முன்னேற்றம் காண்போம். புத்தாண்டு பிறந்து தாய்தமிழ் வளர்ந்து, தமிழ் மக்கள் நல்வாழ்வு வாழ்ந்து, தமிழகம் செழித்து நாடு வளரவேண்டும் என்று கூறி தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-

புத்தாண்டு பவுர்ணமி முழுநிலவு நாளில் ஒளிமிகுந்து பிறக்கிறது. எனவே 2018-ம் ஆண்டு ஒளிமயமான ஆண்டாக இருக்கும் என்பதையே இயற்கை சொல்கிறது. அதேபோல அனைத்து மக்களின் வாழ்க்கையும் இருள் அகன்று, ஒளிமயமாக விளங்கவேண்டும் என்பது தான் நம் பிரார்த்தனை. புதிய ஆண்டு அனைவரது வாழ்க்கையிலும் இனிமை பொங்கவும், கவலைகள் மங்கி மறையவும் வழிவகை செய்யட்டும். நாட்டில் பயங்கரவாதம் ஒழியட்டும், இயற்கை சீற்றங்கள் அற்ற பாதுகாப்பான ஆண்டாக மிளிரட்டும், அனைத்து மக்களின் மகிழ்ச்சியான வாழ்விற்கு உத்தரவாதம் கிடைக் கட்டும். தமிழக மக்களுக்கு பா.ஜ.க. சார்பில் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர்:-

சாதி, மத, மொழி, பிராந்திய வேறுபாடுகளை கடந்து அனைவரையும் இணைக்கக்கூடிய வகையில் அமைந்திருப்பதே ஆங்கில புத்தாண்டு. வருகிற புதிய ஆண்டில் வறுமை, அறியாமை, தீவிரவாதம், வன்முறை அகன்று, மதசார்பற்ற நிலை தொடர்ந்து நிலைத்து, சகோதரத்துவம் தழைத்தோங்கி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் உயர்ந்து அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகி, மக்கள் மகிழ்வுடன் வாழ உளமாற வாழ்த்துகிறேன். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.:-

புத்தாண்டை கொண்டாடும் தமிழகத்தில் உள்ள சகோதர-சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். மலரும் நினைவுகள் எப்போதுமே மகிழ்ச்சியானவை. ஆனால் 2017-ம் ஆண்டில் நடந்தவை எதுவும் அப்படிப்பட்டவை அல்ல. கடந்த ஆண்டின் காயங்களுக்கு புதிய ஆண்டும் மருந்து போடும் என்று நம்புகிறேன். தமிழக மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் புத்தாண்டில் மக்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன். இவை கிடைக்க அவசியத்தேவை அரசியல் விழிப்புணர்வு என்பதால் அதை அடைய மக்கள் உறுதியேற்க வேண்டும்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:-

இதுவரை நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும் என்கிற தொலைநோக்கு சிந்தனையோடு புத்தாண்டை வரவேற்று, மிகுந்த மகிழ்ச்சியோடு சாதி-மத வேறுபாடின்றி கொண்டாடுவோம். ஏழை-எளியோரின் கஷ்டங்கள் நீங்கி, இருள் சூழ்ந்துள்ள வாழ்வில் ஒளி வெள்ளம் ஏற்படட்டும். புத்தாண்டில் தமிழகத்தில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகிய மூன்றும் மக்கள் அனைவருக்கும் உறுதியாக கிடைத்திட வேண்டும் என்று கூறி இதயபூர்வமான புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:-

தமிழக மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் பிறக்கிறபோது புதிய நம்பிக்கைகளும் பிறக்கின்றன. கடந்து செல்லும் ஆண்டு பல்வேறு அனுபவங்களை விட்டு செல்கிறது. அனுபவங்களை அடியுரமாக்கி புதிய நம்பிக்கை பூ மலரட்டும் என வாழ்த்துகிறோம். மக்கள் நலனுக்காக மாற்றுக்கொள்கையை முன்வைத்து அறநெறி சார்ந்த அரசியலை முன்னெடுக்க இந்த புத்தாண்டில் உறுதியேற்போம்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன்:-

2017-ம் ஆண்டு நம்மிடம் இருந்து விடைபெறும்போது துயரங்களையும், படிப்பினைகளை தந்துவிட்டு சென்றுள்ளது. எனவே பல பிரச்சினைகளில் சிக்கி மக்கள் சிதறி விடாமல், ஒற்றுமை காக்க, அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்திட அனைவரும் உறுதிபூண்டிட வேண்டுகிறோம். தமிழக மக்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

மகிழ்ச்சியுடன் மலரும் இப்புத்தாண்டு அனைவருக்கும் சாதனையின் ஆண்டாக, எதிர்பார்த்த மாற்றம் வடிவம் எடுக்கும் ஆண்டாக, எங்கும் நிறைவு என்று எட்டுத்திக்கும் மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். நம்மை இயக்கும் ஆற்றலின் சக்தி ஜெயலலிதா வகுத்த அரசியல் பாதையில், நமது வெற்றி பயணத்தை தொடர்ந்திடுவோம். நம் அனைவருக்கும் புது வாழ்வும், புத்தெழுச்சியும் தரும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:-

நகரும் ஆண்டில் சமூகநீதி, மத சார்பின்மை, சாதி, தீண்டாமை ஒழிப்புக்கு ஏற்பட்ட சோதனைகளை கடந்து முன்னேறும் வகையில், புத்தாண்டு மக்கள் அனைவருக்கும் அனைத்தையும் தரும் குலதர்மம் நீங்கிய சமதர்ம புத்தாண்டாக திகழட்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

இந்தியா ஒரே நாடு. இதில் ஏற்றத்தாழ்வு இல்லா நிலையை மகாகவி பாரதி பாடிய ‘செப்புமொழி பதினெட்டுடையாள் எனினும் சிந்தனை ஒன்றுடையாள்’, என்ற பாடலை நினைவில்கொண்டு ஒற்றுமையோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இப்புத்தாண்டு நமக்கெல்லாம் நல்வழி காட்டிட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:-

புத்தாண்டில் எளியோர்கள் வளம் பெற நம்மால் இயன்றதை செய்வோம். இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு எந்த வகையிலாவது உதவவேண்டும். இப்படி ஒவ்வொருவரும் உதவிக்கரம் நீட்ட தொடங்கிவிட்டால், இல்லாமை மற்றும் இயலாமை போன்ற தீமைகளை தேசத்தை விட்டே விரட்டிவிடலாம். நம் நாட்டை உயர்த்த மக்கள் ஒன்றிணைய வேண்டும். அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் எச்.வசந்தகுமார், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டி.பாரிவேந்தர், வி.ஜி.பி. குழும தலைவரும், தொழில் அதிபருமான வி.ஜி.சந்தோசம், ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி.சேகர், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் மாநிலத்தலைவர் எம்.எம்.ஆர்.மதன், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி அகில இந்திய தலைவர் பா.இசக்கிமுத்து, மாநிலத்தலைவர் ஆ.மணி அரசன், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை பொதுச்செயலாளர் கே.சி.ராஜா, தியாகராயநகர் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் எஸ்.அலிமா சம்சுகனி, அகில இந்திய மக்கள் கழக நிறுவன தலைவர் ஏ.அஸ்மத்துல்லா, தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன், மதசார்பற்ற ஜனதா தளம் மாநில பொதுச்செயலாளர் கரு பவுனாச்சாரி உள்பட பலர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Next Story