பஸ் தொழிலாளர் வேலை நிறுத்தம் வாபஸ் இன்று காலை முதல் பணிக்கு திரும்புகிறார்கள்


பஸ் தொழிலாளர் வேலை நிறுத்தம் வாபஸ் இன்று காலை முதல் பணிக்கு திரும்புகிறார்கள்
x
தினத்தந்தி 12 Jan 2018 12:15 AM GMT (Updated: 2018-01-12T00:27:52+05:30)

8 நாட்களாக நடைபெற்று வந்த பஸ் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

சென்னை,

ஓய்வூதிய நிலுவை தொகையை உடனடி யாக வழங்க வேண்டும், 2.57 மடங்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 22 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.

இந்த போராட்டம் நேற்று 8-வது நாளாக நீடித்தது. பொங்கல் பண்டிகை நெருங்கும் சமயத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

வேலைநிறுத்தத்தில் ஈடு படாத தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்களை கொண்டு குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களே இயக்கப்படுவதால் கூட்ட நெரிசல் மிகவும் அதிகமாக இருந்தது.

இதற்கிடையே, போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கை கடந்த 5-ந் தேதி விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த போராட்டத்துக்கு தடை விதித்ததோடு, உடனடியாக பணிக்கு திரும்புமாறு உத்தரவிட்டது. ஆனால் போக்குவரத்து தொழிலாளர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தொழிற்சங்கங்கள் சார்பில் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அரசு நிர்ணயம் செய்துள்ள 2.44 மடங்கு ஊதிய உயர்வை இடைக்காலமாக ஏற்றுக் கொள்வதாகவும், 2.57 மடங்கு ஊதிய உயர்வு, இதர படிகள் தொடர்பாக ஒரு மத்தியஸ்தரை நியமித்து இருதரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க உத்தரவிடவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து ஊதிய உயர்வு பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிட்ட ஐகோர்ட்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டும், பொதுமக்களின் நலன் கருதியும் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று போக்கு வரத்து தொழிலாளர்களை கேட்டுக் கொண்டது.

ஐகோர்ட்டின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, தொழிற்சங்க நிர்வாகிகள் அங்கிருந்து பல்லவன் இல்லம் வந்து, அந்த பகுதியில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு இருந்த தொழிற்சங்கத்தினரை சந்தித்து, ஐகோர்ட்டில் நடைபெற்ற வழக்கு விசாரணை பற்றிய விவரங்களை தெரிவித்தனர்.

பின்னர் அங்கு நிருபர்களிடம் பேசிய சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் சவுந்தரராஜன், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாகவும், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்றும் அறிவித்தார்.

வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

எனவே தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் வழக்கம் போல் ஓடும்.

Next Story