போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு:ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் மத்தியஸ்தராக நியமனம்


போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு:ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் மத்தியஸ்தராக நியமனம்
x
தினத்தந்தி 11 Jan 2018 11:00 PM GMT (Updated: 11 Jan 2018 7:42 PM GMT)

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

பஸ் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பான இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், எம்.கோவிந்தராஜ் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தொழிற்சங்கங்கள் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘அரசு நிர்ணயம் செய்துள்ள 2.44 மடங்கு ஊதிய உயர்வை இடைக்காலமாக ஏற்றுக்கொள்வதாகவும், 2.57 மடங்கு ஊதிய உயர்வு, இதர படிகள் தொடர்பாக ஒரு மத்தியஸ்தரை நியமித்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க உத்தரவிட வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்குகளை திரும்பப் பெறவேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கையை வாபஸ் பெறவேண்டும். போராட்ட காலத்தில் வேலைக்கு வரவில்லை என்று சம்பளத்தை பிடித்தம் செய்யக்கூடாது’ என்று கூறியிருந்தனர்.

இந்த கோரிக்கைகளை ஏற்க முடியாது. அதேநேரம், ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஒரு மத்தியஸ்தரை நியமிப்பது குறித்து அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக அட்வகேட் ஜெனரல் கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தனர்.

இதைத்தொடர்ந்து மதியம் 2.15 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

அட்வகேட் ஜெனரல்:- இந்த பிரச்சினை குறித்து சமரச பேச்சுவார்த்தை நடத்த ஒரு மத்தியஸ்தரை நியமிக்க தமிழக அரசு ஒப்புக்கொண்டுள்ளது. 0.13 மடங்கு ஊதியத்தை உயர்த்துவது குறித்து மத்தியஸ்தர் முடிவு பண்ணட்டும். பேச்சுவார்த்தை தேதியையும் மத்தியஸ்தர் முடிவு செய்யலாம்.

தொழிற்சங்க வக்கீல்:- ஊதிய உயர்வு பிரச்சினை தொடர்பாக மட்டும் மத்தியஸ்தர் முடிவெடுக்கட்டும். எங்களது மற்ற கோரிக்கைகளை நீதிமன்றம் முடிவு செய்யவேண்டும்.

நீதிபதிகள்:- போக்குவரத்து தொழிலாளர்கள் நலனுக்காக மத்தியஸ்தரை நியமிக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது. நீங்களும் பொதுமக்களை பார்க்க வேண்டும். மத்தியஸ்தத்துக்கு செல்லும்படி நீதிமன்றம் சொல்கிறது. அதை ஏற்பதும், மறுப்பதும் உங்கள் விருப்பம். ஏற்றால் மத்தியஸ்தம். இல்லாவிட்டால் நாங்கள் விசாரிக்கிறோம். ஊதிய உயர்வு மட்டும்தானே மனுவில் கோரியிருக்கிறீர்கள். இப்போது விடுமுறை ஊதியம், நடவடிக்கைக்கூடாது என அனைத்தையும் மத்தியஸ்தம் செய்யவேண்டும் என்று சொல்கிறீர்கள். நாங்கள் பிறப்பிக்க இருப்பது இடைக்கால உத்தரவுதான். நிரந்தர உத்தரவு இப்போது இல்லை. அதை ஏற்றுக்கொள்வதும், கொள்ளாததும் உங்கள் விருப்பம். விபத்து இழப்பீடு வழக்குகள் தொடரப்படுவதற்கு காரணம் உங்கள் ஓட்டுனர்கள்தானே.

தொழிற்சங்க வக்கீல்:- பழுதான பேருந்துகளை கொடுத்தால் எப்படி ஓட்டுவது?

அட்வகேட் ஜெனரல்:- வேலை நிறுத்த காலத்துக்கு ஊதியம் என்பதையும் பரிசீலிக்கிறோம். போராட்ட தடையை எதிர்த்து அறிக்கை விடுகின்றனர். 6 மாதமாக நீதிமன்றம் அவர்களது வழக்குகளை கிடப்பில் போட்டுள்ளதாக தொ.மு.ச. பொதுச்செயலாளர் பேசியுள்ளார். அதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது.

நீதிபதிகள்:- வழக்குகளை நீதிமன்றம் தான் கிடப்பில் போட்டுள்ளதா?. கட்டுப்பாடுடன் பேசவேண்டும். மத்தியஸ்தம் தொடர்பாக மட்டும் உத்தரவு பிறப்பிக்கிறோம். கோர்ட்டுக்கு துணிவில்லை என்று தொழிற்சங்கத்தினர் பேசியுள்ளனர். துணிவு இருக்கா, இல்லையா? என்பதை பார்க்கலாம்.

வழக்கு தொடர்ந்தவர்களுக்கு வக்கீல்கள் அறிவுறுத்தமாட்டீர்களா? கடந்த 6 மாதமாக நிலுவைத் தொகையை வாங்கித்தருவதில் எப்படி பணியாற்றுகிறோம் என்பது தெரியாதா?

இவ்வாறு விவாதம் நடந்தது.

இதன்பின்பு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்படுகிறார். எனவே, போக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும். மனமிருந்தால் மார்க்கம் உண்டு. ஊதிய உயர்வு 2.44 மடங்கா அல்லது 2.57 மடங்கா என்பதையும், எந்த தேதியிலிருந்து ஊதிய உயர்வை வழங்குவது என்பதையும் நீதிபதி பத்மநாபன் உறுதிசெய்வார்.

மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி பேச்சுவார்த்தைக்கான தேதியை அறிவித்து, இரு தரப்பினருடனும் ஒரு மாதத்துக்குள் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டும், பொதுமக்களின் நலன் கருதியும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story