அம்பு எய்தவனை விட்டுவிட்டு, அடையாளம் காட்டிய வைரமுத்து மீது பாய்வது மரபு ஆகாது முன்னாள் அமைச்சர் கண்டனம்


அம்பு எய்தவனை விட்டுவிட்டு, அடையாளம் காட்டிய வைரமுத்து மீது பாய்வது மரபு ஆகாது முன்னாள் அமைச்சர் கண்டனம்
x
தினத்தந்தி 13 Jan 2018 6:45 PM GMT (Updated: 2018-01-14T00:03:55+05:30)

சென்னை மாநிலத்தை தமிழ்நாடு என பெயர் சூட்டிய 50–வது ஆண்டு நினைவு விழாவை அரசு கொண்டாட எடுத்த முடிவை பாராட்டுகிறேன்.

சென்னை, 

முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சென்னை மாநிலத்தை தமிழ்நாடு என பெயர் சூட்டிய 50–வது ஆண்டு நினைவு விழாவை அரசு கொண்டாட எடுத்த முடிவை பாராட்டுகிறேன்.

திரைப்பட உலகில், அரசு கவிஞராக இருந்த கண்ணதாசன், கவிஞர் வாலி போன்று சாகா வரம் பெற்ற சங்கவாடை வீசும் தேனினும் இனிய திரைப்பாடல்கள் இயற்றி இந்திய நாட்டிலேயே அதிக கவுரவ பட்டங்களை பெற்றவர் கவிஞர் வைரமுத்து.

அயல்நாட்டில், பிறமொழியில் ஆண்டாளை பற்றி தவறாக எழுதப்பட்டிருப்பதை எடுத்து காண்பித்ததற்கு வைரமுத்து வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது, பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூக்குரல் எடுப்பது தமிழர்களின் கண்டனத்துக்கு உரியது.

மூதறிஞர் ராஜாஜியே, திருப்பாவையை ஆண்டாள் பாடினார் என்பதே சந்தேகத்துக்கு உரியது என்ற சர்ச்சையை கிளப்பி இருந்தார். எனவே விமர்சனத்தை தாங்கிக்கொள்கிற பக்குவம் வைஷ்ணவருக்கு முக்கியம்.

வைரமுத்து பேசியது அவரது கருத்துக்கூட அல்ல. அம்பு எய்தவனை விட்டுவிட்டு, ஆண்டாளை விமர்சனம் செய்தவரை அடையாளம் காட்டியவர் மீது பாய்வது நல்ல மதத்தினர் கடைபிடிக்க வேண்டிய மரபு ஆகாது. வைரமுத்துவை கண்டித்து உண்ணாவிரத போராட்டங்களை தூண்டுவோர் மீது தமிழக அரசு சட்டம் ஒழுங்கு, பொது அமைதியை காக்க முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story