சிறையில் சசிகலா கன்னடம், கம்ப்யூட்டர் படிக்கிறார்


சிறையில் சசிகலா கன்னடம், கம்ப்யூட்டர் படிக்கிறார்
x
தினத்தந்தி 13 Jan 2018 10:30 PM GMT (Updated: 2018-01-14T01:31:58+05:30)

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் சசிகலா கன்னடம், கம்ப்யூட்டர் படித்து வருகிறார்.

சென்னை,

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் சசிகலா கன்னடம், கம்ப்யூட்டர் படித்து வருகிறார். பெண் கைதிகளுக்கு பிரத்யேக நூலகம் அமைப்பதற்கு சிறைத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கு வயது வந்தோர் கல்வியறிவு திட்டத்தின் கீழ் கன்னட மொழி கற்று கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின்படி, கன்னட எழுத்துகளை உச்சரித்தல், எழுதுதல், வாசித்தல் உள்ளிட்ட பயிற்சிகளை சசிகலாவும் மேற்கொண்டு வருகிறார். இதை தவிர்த்து கம்ப்யூட்டர் பாடத்தின் அடிப்படைகளையும் அவர் கற்றறிந்து வருகிறார். சசிகலாவுடன் அவருடைய உறவினரான இளவரசியும் இந்த வகுப்புகளில் பங்கேற்கிறார். 2 பேரும் சேர்ந்து கன்னட மொழி மற்றும் கம்ப்யூட்டர் அடிப்படைகளை கற்றறிந்து வருகின்றனர்.

இந்த பயிற்சி முடிந்த பிறகு வாய்மொழியாக கற்றறிந்த திறன் குறித்து கற்பிக்கும் நிபுணர்கள் கேள்வி எழுப்புவார்கள். ஆனால் சசிகலா மவுன விரதம் இருப்பதால் பதில் எதுவும் சொல்வதில்லை என்று கூறப்படுகிறது. கன்னட எழுத்துகளை எழுதுவதில் சசிகலா நிபுணத்துவம் பெற்று விளங்குவதாகவும், சசிகலாவும், இளவரசியும் பயிற்சியில் பங்கேற்றதற்கான சான்றிதழ்களை பெற்றுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேபோல சிறைச்சாலையில் புத்தகம் வாசிப்பதில் சசிகலா அதிக ஆர்வம் செலுத்துவதாக கூறப்படுகிறது. ஆண் கைதிகளுக்கு மட்டும் தான் சிறைச்சாலையில் உள்ள நூலகம் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது. சசிகலா புத்தகம் படிப்பதில் செலுத்திய ஆர்வத்தின் காரணமாக சிறைச்சாலை நூலகத்துறை பெண் கைதிகளுக்கு என்று பிரத்தியேக நூலகம் ஒன்றை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. சிறைச்சாலை நூலகத்துறை பெண் கைதிகளுக்கு என்று திறக்கப்படும் நூலகத்துக்கு ரூ.30 ஆயிரம் செலவிடப்பட உள்ளது.

Next Story