குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 Jan 2018 11:00 PM GMT (Updated: 15 Jan 2018 8:08 PM GMT)

குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் குட்கா மற்றும் போதைப் பாக்குகள் தடை விதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகும் போதிலும், அதன் சட்டவிரோத விற்பனை மட்டும் இன்னும் குறையவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. குட்கா விற்பனை ஊழலால் இந்திய அரங்கில் தமிழகத்தின் பெயர் சீர்கெட்டுப் போயிருக்கும் நிலையில், அதன் விற்பனையை ஆட்சியாளர்களும், காவல் துறையினரும் தடுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

குட்கா ஊழல் கடந்த ஆண்டு ஜூன் - ஜூலை மாதங்களில் பெரும் சர்ச்சையானபோது சென்னையில் குட்கா விற்பனையை தடுக்க அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால், அதன்பின் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவாக இப்போது அனைத்துக் கடைகளிலும் அச்சமின்றி குட்கா விற்பனை செய்யப்படுகிறது. குட்கா விற்பனைக்கு கடுமையான நெருக்கடி இருந்தபோது, அதன் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டதாகவும், இப்போது கெடுபிடி குறைந்துவிட்டதால் போதைப் பாக்குகளின் விலையையும் குறைக்கப்பட்டிருப்பதாக வணிகர்கள் கூறும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது என்றால், குட்கா வணிகர்களுக்கு எந்த அளவுக்கு ஆதரவு அதிகரித்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்

ஒருபுறம் மது சமூகத்தை சீரழிக்கும் நிலையில் மற்றொரு புறம் குட்கா போன்ற புகையிலைப் பொருட்களும் சமூகத்தை சிதைக்கத் தொடங்கியிருக்கின்றன. இதேநிலை நீடித்தால், வீரத்தின் விளைநிலமாக திகழ்ந்த தமிழகம் நோய்களின் கூடாரமாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

இதைத்தடுக்க முழு மதுவிலக்கையும், குட்கா விற்பனை மீது உண்மையான தடையையும் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, குட்கா ஊழலின் ஆதி முதல் அந்தம் வரை அடையாளம் கண்டு, சமூகத்தை சீரழித்தவர்களை தண்டிக்க வசதியாக குட்கா ஊழல் குறித்த வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story