ரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலக முடிவு? அரசியல் பணிகளில் தீவிரம்


ரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலக முடிவு? அரசியல் பணிகளில் தீவிரம்
x
தினத்தந்தி 16 Jan 2018 12:15 AM GMT (Updated: 2018-01-16T03:01:03+05:30)

ரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. #Rajinikanth

சென்னை,

ரஜினிகாந்த், கர்நாடகாவில் பார்த்த கண்டக்டர் வேலையை உதறிவிட்டு சினிமா ஆசையால் சென்னை வந்து திரைப்பட கல்லூரியில் படித்து 1975-ல் அபூர்வராகங்கள் படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமானார். அடுத்த வருடத்திலேயே பைரவி படத்தில் கதாநாயகனாக உயர்ந்தார். அந்த வருடத்தில் மட்டும் 15 படங்களில் நடித்தார். அவற்றில் பல படங்களில் வில்லனாக வந்தார்.

அதன்பிறகு அவரது வித்தியாசமான ஸ்டைலால் கதாநாயகனாக நடிக்க மளமளவென படங்கள் குவிந்தன. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார்.

42 வருடங்கள் தமிழ் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த அவர் விரைவில் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் குதிக்க தயாராகி உள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடக்கின்றன. ரஜினிகாந்த் மக்கள் மன்றம் என்ற பெயரில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டு அதற்கு உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.

வீதிவீதியாக மக்களை சந்தித்து விண்ணப்பங்கள் வினியோகித்தும் இணையதளம் மூலமும் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். இந்த பணிகள் முடிந்ததும் அரசியல் கட்சி பெயர் மற்றும் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டு தமிழகம் முழு வதும் சுற்றுப்பயணத்தை ரஜினிகாந்த் தொடங்குகிறார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கட்சி அலுவலகம் தயாராகி வருகிறது.

அரசியலில் தீவிரமாக இறங்கி இருப்பதால் சினிமாவை விட்டு விலகுவது குறித்து ரஜினிகாந்த் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது 2.0, காலா படங்களில் நடித்து முடித்துள்ளார். 2.0 படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. தொடர்ந்து காலா படமும் வெளியாகிறது. அவரிடம் கதை சொல்ல பல இயக்குனர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால் எந்த புதிய படங்களையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

கடைசியாக கட்சி கொள்கைகளை மக்களிடம் பரப்பும் வகை யில் ஒரு அரசி யல் படத்தில் நடித்து விடும்படி நெருக்கமான சிலர் ஆலோசனை கூறியிருப்பதாகவும், அதற்கு அவர் சாதகமான பதிலை சொல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் (14-ந் தேதி) போயஸ்கார்டனில் உள்ள வீட்டில் திரண்ட ரசிகர்களை ரஜினிகாந்த் வெளியே வந்து சந்தித்தார். அப்போது அவர் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து இருந்தார். ரஜினிகாந்தை பார்த்ததும் ரசிகர்கள் வாழ்த்து கோஷமிட்டனர். அவர்களுக்கு ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கும், ரசிகர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரும் செல்வ செழிப்புடன் வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்” என்றார். 

Next Story