டி.டி.வி.தினகரன் தனிக் கட்சி தொடங்கினால் வெளியில் இருந்து ஆதரவு தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி


டி.டி.வி.தினகரன் தனிக் கட்சி தொடங்கினால் வெளியில் இருந்து ஆதரவு தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி
x
தினத்தந்தி 16 Jan 2018 10:15 PM GMT (Updated: 16 Jan 2018 9:15 PM GMT)

டி.டி.வி.தினகரன் தனிக் கட்சி தொடங்கினால் வெளியில் இருந்து ஆதரவு தருவோம் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

சென்னை,

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக, விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. குடும்பத்தினருடன் சென்றார்.

நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தனிக்கட்சி தொடங்குவதற்கு எப்படி செயல்பட வேண்டுமோ, அப்படி செயல்படுவேன். தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக நாளை (அதாவது இன்று) எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் முடிவு செய்வோம். இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன்” என்று கூறினார்.

இது தொடர்பாக, டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களுக்கு எதுவும் தெரியாது

இந்த கருத்தில் எங்கள் தரப்பு எம்.எல்.ஏ.க்களுக்கு எந்தவித கருத்து மாறுபாடும் இல்லை. உள்ளாட்சி தேர்தலுக்குள் கட்சியை தொடங்கி, மாநிலம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் பெரும் வெற்றி பெற்றால், இரட்டை இலை சின்ன வழக்கில் வெற்றி பெற இதை ஒரு காரணமாக முன்வைக்கலாம் என்று டி.டி.வி.தினகரன் கருதலாம்.

கட்சிக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கட்சி, சின்னம் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. அவருடைய முயற்சிக்கு நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு கொடுப்போம். அந்த கட்சியில் நாங்கள் எப்படி இணைந்து செயல்பட முடியும்?. நாங்கள் என்றைக்கும் அ.தி.மு.க. தான். தோழமை கட்சியாக எங்களை நினைத்துக்கொள்ள வேண்டியது தான்.

நிச்சயம் ஜெயிப்பார்

எங்களுக்கு பொதுச் செயலாளர் சசிகலா தான். அவர் இப்போதும் அ.தி.மு.க.வில் தான் இருக்கிறார். துணைப் பொதுச் செயலாளர் தான் தனிக்கட்சி தொடங்கப்போவதாக சொல்லியிருக்கிறார். அவர் தனிக்கட்சி தொடங்குவதே எங்களுக்கு இதுவரையில் தெரியாது. முதலில் அவர் கட்சியைத் தொடங்கட்டும். அதன்பிறகு தேர்தலில் உழைப்பதா, வேண்டாமா என்பதைப் பற்றி பிறகு சொல்கிறோம்.

உள்ளாட்சி தேர்தல் வந்தால், தனிச் சின்னம் வேண்டும். அதற்காகத்தான் அவர் தனிக்கட்சி பாதையில் போகிறார். மக்கள் ஆதரவு இருப்பதால் நிச்சயம் ஜெயிப்பார். அதன்பிறகு இரட்டை இலையை மீட்பார். சுயநலத்துக்காக அவர் கட்சியைத் தொடங்கவில்லை. பொதுவான சின்னம் வேண்டும் என்பதற்காகத்தான் இப்படியொரு முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story