‘இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை நான் சுடவில்லை’ கொள்ளையன் நாதுராம் வாக்குமூலம்


‘இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை நான் சுடவில்லை’ கொள்ளையன் நாதுராம் வாக்குமூலம்
x
தினத்தந்தி 17 Jan 2018 10:30 PM GMT (Updated: 2018-01-18T03:15:49+05:30)

பெரியபாண்டியனை நான் சுடவில்லை. குண்டு சத்தம் கேட்டவுடன் தப்பி ஓடிவிட்டேன் என்று கொள்ளையன் நாதுராம் வாக்குமூலம் அளித்துள்ளான். #tamilnadu #tamilnews

சென்னை,

சென்னை புழல் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள நகைக்கடை கொள்ளை வழக்கில், முக்கிய குற்றவாளியான ராஜஸ்தான் மாநில கொள்ளையன் நாதுராம் தலைமறைவாக இருந்தான். அவனை பிடிப்பதற்காக கடந்த டிசம்பர் மாதம் 13-ந்தேதி ராஜஸ்தான் சென்றிருந்த மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் காயம் அடைந்தார்.

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை சுட்டுக்கொன்றது கொள்ளையன் நாதுராம் என்று ராஜஸ்தான் போலீசில் இன்ஸ்பெக்டர் முனிசேகர் புகார் அளித்தார். இதையடுத்து ராஜஸ்தான் மாநில போலீசார் நாதுராமை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் குஜராத்தில் உள்ள பாகோத்ரா எனும் இடத்தில் நாதுராம் கடந்த 13-ந்தேதி போலீசாரிடம் சிக்கினான். பல கிலோ மீட்டர் காரில் துரத்திச் சென்று துப்பாக்கி முனையில் ராஜஸ்தான் போலீசார் சுற்றி வளைத்து அவனை கைது செய்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்

பின்னர் அவனை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கு குறித்து நாதுராமிடம் விசாரிப்பதற்காக அவனை 3 நாள் போலீஸ் காவலில் ராஜஸ்தான் போலீசார் எடுத்துள்ளனர்.

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இடம் பாலி மாவட்டம் ஜெயத்ரன் போலீஸ் நிலைய எல்லைக்குள் வருகிறது. எனவே ஜெயத்ரன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதாங்கி, கொள்ளையன் நாதுராமிடம் விசாரணை நடத்தினார்.

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை சுட்டது யார்? என்று நாதுராமிடம் கேள்வி எழுப்பி விசாரணை மேற்கொண்டார்.

அதற்கு அவன், சம்பவத்தன்று சென்னை போலீசாருக்கும், எங்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நாங்கள் அவர்களிடம் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்ற ஒரே மனநிலையில் இருந்தோம். எனவே கற்கள், கட்டைகளை வீசி அவர்களை தாக்கினோம். அப்போது துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்து நாங்கள் அனைவரும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டோம். எனவே நானோ, எனது கூட்டாளிகள் யாரும் அவரை சுடவில்லை என்று வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியானது.

இந்த தகவல் உண்மையா? என்று இன்ஸ்பெக்டர் ஜெகதாங்கியிடம் தமிழக பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, அதற்கு அவர் உண்மை தான் என்று தெரிவித்தார்.

இன்ஸ்பெக்டர் முனிசேகர் மீது....

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை இன்ஸ்பெக்டர் முனிசேகர் தான் குறி தவறி சுட்டு இருக்கலாம் என்று அவர் மீது ராஜஸ்தான் போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்தநிலையில் நாதுராம் வாக்குமூலத்தை அடுத்து ராஜஸ்தான் போலீசார் அதனை உறுதி செய்துள்ளனர். எனவே இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ராஜஸ்தான் போலீசார் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சென்னை நகைக்கடை கொள்ளை வழக் கில் நாதுராமை சென்னை அழைத்து வந்து போலீ சார் விசாரிக்க உள்ளனர். இதற்காக சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் ஒரு சில தினங்களில் ராஜஸ்தான் செல்ல இருக் கின்றனர். 

Next Story