நினைவு இல்லமாக மாற உள்ள ஜெயலலிதா வீட்டில் ‘சீல்’ வைக்கப்பட்ட 2 அறைகளில் ஆய்வு முடிந்தது


நினைவு இல்லமாக மாற உள்ள ஜெயலலிதா வீட்டில் ‘சீல்’ வைக்கப்பட்ட 2 அறைகளில் ஆய்வு முடிந்தது
x
தினத்தந்தி 17 Jan 2018 10:49 PM GMT (Updated: 2018-01-18T04:19:15+05:30)

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீட்டில் சீல் வைக்கப்பட்ட 2 அறைகளில் ஆய்வு முடிந்தது.

சென்னை, 

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீடான வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந் தேதி அதற்கான பணிகள் தொடங்கியது.

அன்றைய தினம் சென்னை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தலைமையில், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நில அளவைத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் வேதா நிலையத்தில் சுமார் 6 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வருமான வரித்துறை அதிகாரிகளால் ‘சீல்’ வைக்கப்பட்ட 2 அறைகளுக்கு அதிகாரிகள் செல்லவில்லை.

வேதா நிலையத்தின் கட்டிட ஸ்திரத்தன்மை வலுவாக இருக்கிறதா? உள்பட பல்வேறு பணிகளை மட்டுமே அவர்கள் மேற்கொண்டனர்.

2-வது முறையாக ஆய்வு

இந்த நிலையில் வேதா நிலையத்தில் சென்னை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தலைமையில், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் நேற்று காலை 10.30 மணியளவில் மீண்டும் 2-வது முறையாக ஆய்வு செய்வதற்காக வந்தனர். வருமான வரித்துறை அதிகாரிகளும் ஆய்வில் பங்கேற்றனர்.

இதனால் போயஸ் கார்டனில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 9 மணி நேரம் நடந்த இந்த ஆய்வு இரவு 7.30 மணிக்கு நிறைவடைந்தது.

இதுபற்றி கலெக்டர் அன்புச்செல்வன் கூறியதாவது:-

‘சீல்’ வைக்கப்பட்ட அறைகள் திறப்பு

கடந்த முறை வேதா நிலையத்தில் ஆய்வு நடத்தப்பட்டபோது வருமான வரித்துறையினரால் சீல் வைக்கப்பட்ட 2 அறைகளில் நாங்கள் ஆய்வு செய்யவில்லை.

இந்த நிலையில் இன்று (அதாவது நேற்று) வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட அந்த 2 அறைகளும் திறக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘வேதா நிலையத்தின் நிலம் மற்றும் கட்டிடத்தை, நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்த பின்பு வேதா நிலையம் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றும், அங்கு இனி மேற்கொண்டு ஆய்வு செய்வதற்கான அவசியமில்லை என்றும் தெரிவித்தார். 

Next Story