காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் மறைவுக்கு, தலைவர்கள் இரங்கல்


காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் மறைவுக்கு, தலைவர்கள் இரங்கல்
x
தினத்தந்தி 28 Feb 2018 8:39 AM GMT (Updated: 28 Feb 2018 8:39 AM GMT)

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் மறைவுக்கு, தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். #JayendraSaraswathi

சென்ன

காமகோடி பீடத்தின் 69-வது சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் (வயது 82) இன்று காலமானார். 

 ஜெயேந்திரர் மறைவுக்கு பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி ,சுஷ்மா சுவராஜ், சுரேஷ் பிரபு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் ஆன்மீக தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜெயேந்திரர் மறைவுக்கு ராகுல்காந்தி இரங்கல்

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “ஜெயேந்திரரின் போதனைகள் உலகெங்கும் உள்ள பக்தர்களால் மதிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

 தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

ஜெகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் மரணம்  அடைந்ததை அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.  நேற்று அவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றேன்.

அவரது காலத்தில் பல பள்ளிகள், கண் ஆஸ்பத்திரிகள், குழந்தை அறக்கட்டளை ஆஸ்பத்திரி, இந்து மிஷன் ஆஸ்பத்திரியை தொடங்கினார்.  மற்றும் தமிழ்நாடு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல்வேறு பொதுநல நிறுவனங்களை சமுதாயத்திற்காக நிறுவினார்.

அவரது மறைவு சமுதாயத்துக்கு குறிப்பாக அவரது ஆதரவாளர்களுக்கு மிகப் பெரிய  இழப்பாகும். அவரது ஆதாரவாளர்கள் அனைவருக்கும்  எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்  கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் மறைவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜெயேந்திரர் மறைவு செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தம் அடைந்தேன் என அவர் கூறியுள்ளார். மேலும், ஆன்மீக பணிகளோடு சமூக முன்னேற்றத்திலும் அக்கறை காட்டியவர் ஜெயேந்திரர் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். 

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள இரங்கல்  செய்தியில்,

காஞ்சி மடத்தின் பீடாதிபதி திரு.ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி அவர்கள் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்  என கூறி உள்ளார்.

காஞ்சி ஜெயேந்திரர் மறைவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது ,

காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திரர் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்  ஜெயேந்திரரை இழந்து வாடும் அவருடைய விசுவாசிகள், சங்கர மட பணியாளர்களுக்கு ஆறுதல் என கூறி உள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:-

காஞ்சி சங்கர மடத்தின் தலைவர் ஜெயேந்திரர் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இச்செய்தி கேட்டு வேதனையும், துயரமும் அடைந்தேன்.

காஞ்சி ஜெயேந்திரர் மடாதிபதி என்பதைக் கடந்து கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளை தொடங்கி சேவை நோக்கத்துடன் நடத்தி வந்தார். காஞ்சி மடத்தின் சார்பில் ஏராளமான தொண்டு நிறுவனங்களையும் நடத்தி வந்தார்.

நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருந்து வந்த அயோத்தி சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். அவரது மறைவு அவரைச் சார்ந்த அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் மரணம் அதிர்ச்சி அளிப்பதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். சமூக சிந்தனையுடன் கூடிய ஆன்மிகவாதியை பாரதம் இழந்திருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 

ஜெயேந்திரர் மறைவு குறித்து செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாகவும் மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

 காஞ்சி பெரியவர் ஜெயேந்திரர் மறைவு மிகப்பெரிய அதிர்ச்சி; ஈடு செய்ய முடியாத இழப்பு என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்து உள்ளார்.

ஜெயேந்திரர் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது என  வானதி சீனிவாசன் கூறி உள்ளார்.

 சீர்திருத்தவாதியான ஜெயேந்திரர் நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றியவர் என பா.ஜ.க. பொதுச்செயலாளர் ராம் மாதவ் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

 #Kanchisankaracharyar #Jayendrar #JayendraSaraswathi #Kanchipuram

Next Story