‘ஜெயலலிதா, காவிரி பிரச்சினை பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்’


‘ஜெயலலிதா, காவிரி பிரச்சினை பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்’
x
தினத்தந்தி 8 April 2018 4:30 AM IST (Updated: 8 April 2018 4:19 AM IST)
t-max-icont-min-icon

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்தபோது காவிரி பிரச்சினை குறித்து ஜெயலலிதா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்று விசாரணை ஆணையத்தில் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் தெரிவித்தார்.

சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. முன்னாள் தலைமை செயலாளர்கள் ஷீலாபால கிருஷ்ணன், ராமமோகனராவ், இருதய நோய் தடுப்பு சிறப்பு அரசு மருத்துவர்கள் முரளிதரன், தினேஷ் ஆகியோரிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் நேற்று குறுக்கு விசாரணை நடத்தினார். அதன்பின்னர் வெளியே வந்த ராமமோகனராவ் நிருபர்களிடம் கூறியதாவது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாட்களும் என்ன நடந்தது, மருத்துவமனையில் இருந்தபோது அவர் காவிரி பிரச்சினை குறித்து அதிகாரிகளுடன் என்ன பேசினார் என்பது குறித்தும் விசாரணை ஆணையத்தில் தெரிவித்தேன்.

2016-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி காவிரி பிரச்சினை குறித்து படுக்கையில் இருந்தபடியே ஜெயலலிதா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் நான், ஷீலாபாலகிருஷ்ணன், அப்போதைய தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் முத்துக்குமாரசாமி மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டோம். சுமார் 2 மணி நேரம் ஜெயலலிதா எங்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க என்ன செய்ய வேண்டும் என்று உணர்ச்சிகரமாக உத்வேகத்துடன் பேசினார். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் என்னென்ன தகவல்களை தெரிவிக்க வேண்டும், மத்திய அரசிடம் என்ன பேச வேண்டும் என்பது தொடர்பாக அறிவுரை கூறினார். இதுசம்பந்தமாக என்ன செய்துள்ளர்கள்? என்றும் கேட்டார். இந்த விஷயங்களை எல்லாம் குறுக்கு விசாரணையில் தெரிவித்தேன். ஜெயலலிதா காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இவ்வாறு அவர் கூறினார்.

குறுக்கு விசாரணையின் போது நடந்தது குறித்து வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் கூறியதாவது.

அப்பல்லோ மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து ஜெயலலிதாவை கொண்டு வந்த போது பார்த்து பேசியதாகவும், அந்த சமயத்தில் அப்போதைய சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சில அமைச்சர்கள் இருந்ததாகவும், தன்னிடம் ஜெயலலிதா பேசியதை ஓ.பன்னீர்செல்வம் பார்த்தார் என்றும் ராமமோகனராவ் கூறினார்.

அப்பல்லோ மருத்துவ மனையில் ஜெயலலிதாவுக்கு 75 நாட்கள் முறையான சிகிச்சை வழங்கப்பட்டது என்பதை ஷீலாபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

செப்டம்பர் 27-ந் தேதி ஜெயலலிதாவுக்கு மூக்கில் டியூப் பொருத்தப்பட்டிருந்தபோது அவர் கைக்குட்டையால் முகத்தை துடைத்துக்கொண்டு காவிரி உரிமையை விட்டுக்கொடுக்கக்கூடாது, காவிரி பிரச்சினைக்காக போராட வேண்டும், மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தின் வாழ்வாதாரத்தையும், ஜீவாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று உணர்ச்சிகரமாக பேசியதாகவும், தான் டெல்லியில் இருந்தபோது செல்போனில் தன்னிடம் பேசிய ஜெயலலிதா காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து பேசியதாகவும் ராமமோகனராவ் தெரிவித்தார்.

ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்வது சம்பந்தமாக 3 முறை பேசப்பட்டதாகவும், அந்த சமயத்தில் ஜெயலலிதாவுக்கு இருந்த உடல்நிலை பாதிப்பு காரணமாக 10 மணி நேரம் பயணம் செய்து வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல இயலாது என்று ரிச்சர்டு பீலே தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், 2016-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந் தேதியில் இருந்து 27-ந் தேதி வரை ஜெயலலிதாவை சில அமைச்சர்கள் சந்தித்துள்ளார்கள் என்றும், பாதுகாப்பு அதிகாரிகள் இதை தெரிவித்ததாகவும் கூறினார்.

மீண்டும் ரிச்சர்டு பீலே வந்த போது ஜெயலலிதா நலம்பெற்று இருந்த காரணத்தினால் வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் தெரிவித்ததாக மற்ற மருத்துவர்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.

ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்லும் விவகாரத்தில் சசிகலா குறுக்கீடு செய்தார் என்றோ, தடுத்தார் என்றோ யாரும் ஆணையத்தில் சாட்சியம் அளிக்கவில்லை.

2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி மாலை 4.20 மணியில் இருந்து 5-ந் தேதி இரவு வரை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆவணங்களை பார்த்த அரசு மருத்துவர் முரளிதரன், ஆவணங்களில் கூறப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் சரியானது தான் என்று சாட்சியம் அளித்து இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

நேற்றைய குறுக்கு விசாரணைக்கு ஆஜராக ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கிற்கு ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், அவர் நேற்று ஆஜராகவில்லை. சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா, மகன் விவேக் உள்ளிட்டவர்களிடம் 16-ந் தேதி சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடத்த ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Next Story