‘யாரை காப்பாற்ற ராமமோகனராவ் பொய் சொல்கிறார்’ அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி


‘யாரை காப்பாற்ற ராமமோகனராவ் பொய் சொல்கிறார்’ அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி
x
தினத்தந்தி 9 April 2018 5:24 AM IST (Updated: 9 April 2018 5:24 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதாவை வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க அழைத்து செல்ல ஆலோசனை செய்ததாக தெரிவிக்கும் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ், தற்போது யாரை காப்பாற்ற இந்த பொய்யை சொல்கிறார் என்று தெரியவில்லை என அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரத்தில் நேற்று சமூக நலத்துறை சார்பில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட, அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் ரீதியான அழுத்தத்தை கொடுத்து, சட்ட ரீதியான நடவடிக்கையையும் எடுத்து வருகிறது. அதே போல் அரசியல் ரீதியாக யாருக்கும் பாதிப்பு இல்லாமல் அறவழி போராட்டத்தில் எங்களது எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவித்து வருகின்றோம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, மத்திய அரசு மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை(அதாவது இன்று) விசாரணைக்கு வர இருக்கிறது.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இறந்து ஓராண்டு காலம் ஆகிறது. இதுநாள் வரை மவுனமாக இருந்த தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ், தற்போது ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க ஆலோசனை செய்ததாக கூறுகின்றார்.

இத்தனை நாட்களாக இதுபற்றி பேசாமல் என்ன செய்து கொண்டு இருந்தார் என்று தெரியவில்லை. அவர் யாரிடம் ஆலோசனை செய்தார், சிகிச்சை அளிக்க தடை விதித்தது யார், தடுத்தது யார் என்று தெரியவில்லை. யாரை காப்பாற்றுவதற்காக ராமமோகனராவ் இதுபோன்ற அப்பட்டமான பொய்யை சொல்கிறார்.

தமிழக அரசு என்றைக்கும் ‘நீட்’ தேர்வை ஆதரிக்கவில்லை. கடுமையாக எதிர்த்த அரசு ஜெயலலிதா அரசு. உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பினால் நீட் வந்தது. நீட் என்ற கருவை உருவாக்கியது தி.மு.க. அரசு தான்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story