அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் எந்த முறைகேடும் நடைபெறவில்லை; தமிழிசை சவுந்தரராஜன்


அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் எந்த முறைகேடும் நடைபெறவில்லை; தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 9 April 2018 8:55 AM IST (Updated: 9 April 2018 8:55 AM IST)
t-max-icont-min-icon

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #AnnaUniversity

சென்னை,

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 2 வருடங்களாக காலியாக இருந்தது. புதிய துணைவேந்தரை நியமிப்பதற்காக  துணைவேந்தர் தேடுதல் குழு நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில் அமைக்கப்பட்டது. துணைவேந்தராக நியமிக்கக்கோரி விண்ணப்பித்த 170 பேரில் 8 பேரை தேர்ந்தெடுத்து தேடுதல் குழு நேர்முகத்தேர்வு நடத்தியது.

அந்த 8 பேரில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவன மெட்டீரியல் எனர்ஜி துறை கவுரவ பேராசிரியர் எம்.கே.சூரப்பா தேர்வு செய்யப்பட்டார்.

அவரிடம், கவர்னர் மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேர்காணல் நடத்தி அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கவர்னர் மாளிகை அறிவித்தது.

அண்ணா பல்கலை துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா நியமனம் செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, அண்ணா பல்கலை துணைவேந்தர் நியமனத்தில் எந்த முறைகேடும் இல்லை என கூறினார்.

அ.தி.மு.க. தலைமையிலான அரசு துணைவேந்தர் பதவிக்கு அகில இந்திய அளவில் விண்ணப்பிக்கலாம் என சட்டம் கொண்டு வந்தது.  அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த சட்டத்தின்படியே சூரப்பா நியமனம் செய்யப்பட்டார்.  எனவே இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

Next Story