தமிழக பல்கலைக்கழகங்களை எடுத்துக்கொள்ள மத்திய அரசு முயற்சிக்கிறது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழக பல்கலைக் கழகங்களை எடுத்துக்கொள்ள மத்திய அரசு முயற்சிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெருமளவில் சொத்துகள் கொண்ட பல்கலைக் கழகங்களை மத்திய அரசின் கல்வித்துறை (மனிதவள மேம்பாட்டுத்துறை) தனது நேரடி கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளப்போவதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் சார்பில், பல்கலைக்கழகங்களின் சொத்துகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் மாநிலத்தில் உள்ள மத்திய பா.ஜ.க.வின் பிரதிபலிப்பான அ.தி.மு.க. அரசும், மாநில சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களை தாரை வார்க்க திரைமறைவில் ரகசியமாக மத்திய பா.ஜ.க. அரசுடன் கைகோர்த்து செயல்படுகிறதா என்ற பலத்த சந்தேகம் கல்வியாளர்கள் மத்தியில் பரவலாக எழுந்து அவர்களுடைய சினத்தைக் கிளறியிருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கோவை வேளாண் பல்கலைக்கழகம் போன்றவற்றையும் சென்னை ராணி மேரிக்கல்லூரி, பிரசிடென்சி கல்லூரி போன்ற தமிழகக் கல்வி வரலாற்றின் குறிப்பிடத்தகுந்த உயர் தனிப்பெரும் நிறுவனங்களை, மத்திய அரசு சூழ்ச்சித் திறனுடனும், உள்நோக்கச் சதித்திட்டத்துடனும், தனது அதிகாரக் குடையின்கீழ் கொண்டு வருவதற்கான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு ஜூன் மாதத்தில் வெளிவரும் என்றும் வெளிவந்துள்ள தகவல், மாநில சுயாட்சி மீதும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தின் மீதும் நடத்தப்படும் அப்பட்டமான நேரடித் தாக்குதல் மட்டுமல்ல, மத்தியில் உள்ள அதிகாரக் குவியலின் மீதேறி பா.ஜ.க. அரசு கோர தாண்டவம் ஆட குறிவைத்திருப்பதைப் போல் தெரிகிறது.
தமிழ்நாடு, மாநில சுயாட்சிக்கு முதன்முதலில் குரல் கொடுத்த மாண்புக்குரிய மண். இங்குள்ள 13 பல்கலைக்கழகங்களும் மாநில சட்டங்களின்படி தமிழகத்தின் தேவைக்கேற்ப உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள். மாநில அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த பல்கலைக்கழகங்களை இறக்குமதி செய்யப்பட்ட துணைவேந்தர்கள் மூலம் குறுக்கு வழியில் நிர்வகிக்கவோ, அதுவும் போதாது என்று நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு அடிப்படைவாதத்தைத் திணிக்கவோ ஒத்திகை பார்க்கும் விபரீத விளையாட்டில் மத்திய அரசு ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
மத்திய பா.ஜ.க. அரசு அப்படியொரு அத்துமீறலில் ஈடுபடுமேயானால், தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை கடுமையான போராட்டத்தையும் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகவே, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களைத் தூக்கிக்கொண்டு போக மத்திய பா.ஜ.க. அரசு முயற்சிகளை மேற்கொண்டால் அவற்றுக்கு அ.தி.மு.க. அரசு எவ்வித ஒத்துழைப்பும் அளிக்கக்கூடாது என்றும், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் யாரும் மாநில அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டை மீறி பா.ஜ.க.வின் காவிமயக் கொள்கைக்கு கைகொடுக்கக் கடுகளவும் செயல்படக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
கனவிலும் நினைக்க கூடாது
அப்படி மீறிச் செயல்படும் துணைவேந்தர்களை நேரடியாக டிஸ்மிஸ் செய்வதற்கு மாநில அரசு சிறிதும் தயங்கக்கூடாது என்றும், தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கனவிலும் நினைக்கக்கூடாது என்றும், எங்காவது ஒரு மூலையில் அது போன்ற கனவு இருந்தால் கூட அதை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story