ஜாடிக்கு ஏற்ற மூடி போல மோடிக்கு ஏற்ற எடப்பாடி மு.க.ஸ்டாலின் பேச்சு
ஜாடிக்கு ஏற்ற மூடி என்ற முதுமொழி போல மோடிக்கு ஏற்ற எடப்பாடி என்ற புதுமொழி உருவாகி இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
தஞ்சாவூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 7-ந் தேதி திருச்சி முக்கொம்பில் இருந்து அவர் தனது பயணத்தை தொடங்கினார். 2-வது நாள் நேற்றுமுன்தினம் தஞ்சை தெற்கு மாவட்டத்தில் காவிரி உரிமை மீட்பு பயணம் நடைபெற்றது.
மூன்றாவது நாளான நேற்று தஞ்சை வடக்கு மாவட்டத்தில் உள்ள அன்னப்பன்பேட்டையில் இருந்து காவிரி உரிமை மீட்பு பயண கொடியை ஏற்றி வைத்து ஸ்டாலின் தனது பயணத்தை தொடங்கினார்.
அவருடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அன்பழகன், கோவி.செழியன் மற்றும் ஒன்றிய, நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பயணத்தில் காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
மு.க.ஸ்டாலின் மெலட்டூர், ஒன்பத்துவேலி, திருக்கருக்காவூர், இடையிருப்பு, இரும்புதலை, சாலியமங்கலம், சூழியக்கோட்டை, அருந்தவபுரம், புளியக்குடி, புத்தூர், அம்மாப்பேட்டை ஆகிய இடங்களில் காவிரி உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டார். புத்தூரில் அவர் விவசாயிகளை சந்தித்து பேசினார். அப்போது மழை கொட்டியது. கொட்டும் மழையில் அங்கு திரண்டிருந்த பொது மக்கள், விவசாயிகள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அவர் பேசியதாவது:-
“ஜாடிக்கு ஏற்ற மூடி” என்று ஒரு முதுமொழி உண்டு. இப்போது “மோடிக்கேற்ற எடப்பாடி” என்ற புதுமொழி உருவாகியிருக்கிறது. இப்படி மத்தியில் இருக்கிற ஆட்சியும், மாநிலத்தில் உள்ள ஆட்சியும் காவிரிப் பிரச்சினையில் தமிழக விவசாயிகளுக்கும், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மிகப்பெரிய துரோகத்தை தொடர்ந்து இழைத்து வருகின்றன. அதிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வதற்கு பல போராட்ட களங்களை வகுத்து வருகிறோம்.
இவற்றில் எதிர்க்கட்சிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உள்பட பலரும் பங்கேற்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளாக இருக்கின்ற 9 கட்சிகள் இணைந்து நடத்தும் இந்த போராட்டத்தில், கொட்டுகின்ற மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் அனைவரும் பங்கேற்று இருப்பதை கண்டு நான் உள்ளபடியே பெருமையடைகிறேன். எங்களுடைய பயணத்துக்கு ஊக்கமும், உற்சாகமும் வழங்குவதாக இது அமைந்திருக்கிறது.
பிரதமர் மோடி வருகிற 12-ந் தேதி தமிழகத்துக்கு வருகிற நேரத்தில், அவருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை நடத்துவதென எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து முடிவெடுத்து இருக்கிறோம். சென்னையையொட்டி நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கும் நேரத்தில் இந்த போராட்டத்தை நடத்த முடிவு செய்திருக்கிறோம். அதேபோல, தமிழ்நாடு ஒரு துக்க நாள் கொண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதை வெளிப்படுத்தும் வகையில் அவர் தமிழ்நாட்டுக்கு வரும்போது நம் ஒவ்வொருவர் வீட்டிலும் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் என்று நாங்கள் அறிவித்தோம். அதுமட்டுமல்ல, அனைவரும் கருப்பு சட்டை, கருப்பு புடவை அணிந்து நம்முடைய உணர்வை வெளிப்படுத்த வேண்டும். அன்று தமிழ்நாடே கருப்பு தினமாக காட்சியளிக்க வேண்டும். எனவே இதையெல்லாம் மனதில் கொண்டு உங்களுடைய நல்லாதரவை வழங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story