போராட்டத்தில் கைதாகி பல்லாவரம் மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்த சீமான் உள்ளிட்டோர் விடுவிப்பு
பிரதமர் மோடிக்கு எதிரான போராட்டத்தில் கைதாகி பல்லாவரம் மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்த சீமான் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். #Seeman
சென்னை,
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று சென்னை வருகை தந்த பிரதமர் மோடிக்கு தி.மு.க, காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.எம், நாம் தமிழர், த.வா.க, ம.ம.க, தி.க உள்ளிட்ட பல கட்சியினர் கருப்புகொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். சினிமா கலைஞர்களாக பாரதி ராஜா, அமீர், வெற்றி மாறன் ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்து கைதாகினர்.
கைதான அனைவரும் பல்லாவரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். போராட்டங்களில் கைதாகும் அனைவரும் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்படுவார்கள். ஆனால், சீமான் உள்ளிட்டோர் விடுவிக்கப்படாததால், சீமான் கைதாகலாம் என தகவல்கள் பரவின.
ஐ.பி.எல் போட்டியின் போது போலீசாரை தாக்கியதாக கொலை முயற்சி வழக்கு சீமானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டு இருந்தால், சீமான் கைது ஆக அதிக வாய்ப்புகள் உள்ளதாக பரவலாக பேசப்பட்டது. இதற்கு ஏற்றார் போல், மண்டபத்திலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், “ எவ்வித போராட்டங்களையும் அறிவிப்பிற்கு முன் முன்னெடுக்க வேண்டாம். தலைமையிலிருந்து அறிவிப்பு வெளியாகும் வரை பொறுமை காக்கவும். சட்டப்படி எதையும் எதிர்கொள்வோம்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நாம் தமிழர் கட்சியின் டுவிட்டர் பதிவு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஏறத்தாழ 8.30 மணியளவில், பல்லாவரம் மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்த சீமான், தனியரசு, தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story