தளவாட உற்பத்தி சேவையில் தமிழகம் 25 சதவீதம் பங்களிப்பு எடப்பாடி பழனிசாமி பேச்சு
தளவாட உற்பத்தி மற்றும் சேவையில் தமிழகம் 25 சதவீத பங்களிப்பை அளிக்க விரும்புகிறோம் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னை,
சென்னையை அடுத்த திருவிடந்தையில் ராணுவ பாதுகாப்பு கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
பண்டைய சோழர், சேர மற்றும் பாண்டியர்கள் ஆட்சிக்காலத்திலேயே தமிழகம் ராணுவ வலிமையைப் பெற்றிருந்தது என்பதை அனைவரும் அறிவர். ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்வது தமிழகத்துக்கு புதிதல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அவை தமிழகத்தில் தயாரிக்கப்பட்டன. ராணுவ தளவாடங்கள், விமானப்படை ஆயுதங்கள், கப்பல் கட்டுதல், மின்னணு போர்க்கருவிகள், பாதுகாப்பு ஆடைகள் ஆகியவற்றை தயாரிப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
தமிழக அரசு வெளியிட்ட தொலைநோக்கு பார்வை செயல் திட்டமான ‘விஷன்-2023’ அறிக்கையில், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வலிமையான தொழில் சூழ்நிலை நிலவுவதோடு, திறமையான மனிதசக்திகளும் உள்ளன. இதன் மூலம், ஆட்டோமொபைல், பொறியியல் உற்பத்தியில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அடுத்ததாக, பாதுகாப்பு மற்றும் விண்வெளி தளவாட உற்பத்தியில் கவனம் செலுத்தப்பட உள்ளது. நாட்டின் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான தளவாட உற்பத்தி மற்றும் சேவையில் தமிழகம் 25 சதவீத பங்களிப்பை அளிக்க விரும்புகிறோம்.
தமிழக அரசு விண்வெளி மற்றும் பாதுகாப்பு கொள்கையை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, இத்துறையில் தமிழகம் 25 சதவீத பங்களிப்பை அளிக்க முடியும்.
ஸ்ரீபெரும்புதூரில் சென்னை விண்வெளி மற்றும் பாதுகாப்பு பூங்கா உருவாக்குவது இக்கொள்கையின் ஓர் அங்கமாகும். முதற்கட்டமாக 250 ஏக்கர் பரப்பளவில் இப்பூங்கா அமைக்கப்படும். அடுத்தகட்டமாக, 500 ஏக்கர் பரப்பளவுக்கு விரிவாக்கம் செய்யப்படும்.
தமிழகத்தில் அமைய உள்ள பாதுகாப்பு தொழில் வழித்தடத்துக்குத் தேவையான சாலை வசதிகள். மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து தரும்.
இலகு ரக போர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை சேலத்தில் அமைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், கோவையில் விமானங்களை பழுது நீக்குதல் மற்றும் பராமரிப்பதற்கான முனையமும் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் பழனிசாமி கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தொழிற்சாலைகளுக்கு ஒற்றைச்சாளர முறையில் உரிமம் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம், எளிமையான முறையில் தொழில் தொடங்கமுடியும். இந்த ஒற்றைச்சாளர முறையில் உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை 2 மாதங்களில் அறிமுகப்படுத்த உள்ளோம் என்றார்.
நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story