மு.க.ஸ்டாலின் நடத்திய காவிரி உரிமை மீட்பு பயணம் நிறைவு வாகன பேரணி ரத்து


மு.க.ஸ்டாலின் நடத்திய காவிரி உரிமை மீட்பு பயணம் நிறைவு வாகன பேரணி ரத்து
x
தினத்தந்தி 13 April 2018 5:15 AM IST (Updated: 13 April 2018 3:34 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் நடத்திய காவிரி உரிமை மீட்பு பயணம் நேற்று கடலூரில் நிறைவுபெற்றது.

சென்னை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காவிரி உரிமை மீட்பு பயணத்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். 6-வது நாளான நேற்று சிதம்பரம் அருகே உள்ள கடவாச்சேரியில் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இதையடுத்து மு.க.ஸ்டாலின் சிதம்பரம் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்தார்.

அப்போது விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி ஆகியோர் அந்த ஓட்டலுக்கு சென்று மு.க.ஸ்டாலினிடம் ஒரு சம்மன் கொடுத்தனர். ஆனால் அந்த சம்மனை மு.க.ஸ்டாலினோ, கட்சி நிர்வாகிகளோ வாங்க மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணத்தை முடித்துவிட்டு நாளை (இன்று) காலை கடலூரில் இருந்து வாகனங்களில் பேரணியாக சென்னை சென்று கவர்னரை சந்திப்பதற்கு முடிவுசெய்துள்ளார். அவ்வாறு செல்லும்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருக்கும் என்பதால் பேரணியை நிறுத்துமாறு அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவித்தனர்.

இதேபோல் விழுப்புரம் மாவட்டம் சார்பில் கோட்டக்குப்பம் போலீசாரும் மு.க.ஸ்டாலினிடம் சம்மன் கொடுக்க சென்றனர். அதையும் மு.க.ஸ்டாலின் வாங்கவில்லை.

கடலூரில் நேற்று மாலை திருச்சி முக்கொம்பில் தொடங்கிய மு.க.ஸ்டாலின் பயணமும், அரியலூரில் இருந்து தொடங்கிய பயணமும் சங்கமித்தது. பின்னர் காவிரி உரிமை மீட்பு பயண நிறைவு பொதுக்கூட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

இதில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு பேசினர்.

இன்று (வெள்ளிக்கிழமை) கடலூரில் இருந்து ஆயிரம் வாகனங்களில் பேரணியாக சென்னை வருவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் அதற்கான அனுமதியை போலீசார் அளிக்கவில்லை. இந்நிலையில் வாகன பேரணியை மு.க.ஸ்டாலின் ரத்து செய்துள்ளார்.

அவர் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை வருகிறார். அங்கு காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். பின்னர் பகல் 12 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Next Story