பாலியல் வன்கொடுமைகளை தடுக்க கடுமையான சட்டம் வேண்டும் ஜி.கே.வாசன், சரத்குமார் வலியுறுத்தல்


பாலியல் வன்கொடுமைகளை தடுக்க கடுமையான சட்டம் வேண்டும் ஜி.கே.வாசன், சரத்குமார் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 April 2018 2:30 AM IST (Updated: 14 April 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

பாலியல் வன்கொடுமைகளை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ஜி.கே.வாசன், சரத்குமார் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை, 

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் ஆசிபா என்ற 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இச்செயல் வேதனைக்குரியது, வருத்தம் அளிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் பாலியல் வன்கொடுமைக்கு என்று தனிச்சட்டத்தை, கடுமையான சட்டத்தை உருவாக்கி அதனை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

நம் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நல்லொழுக்க கல்விக்கும், மனிதநேய கல்விக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்தியர்கள் ஒருவருக்கொருவர் அன்பாக, ஒற்றுமையாக, பாதுகாப்பாக வாழ்வதற்குண்டான சூழலை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. தற்போது ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சம்பவத்தை த.மா.கா. வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சரத்குமார்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிபா காவல்துறை நபர் உள்பட 8 நபர்களால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. இந்திய இறையாண்மைக்கும், மதநல்லிணக்கத்திற்கும் சவால்விடும் கொடூர சம்பவமாகவே இந்த பாலியல் வன்கொடுமையை பார்க்கிறேன். அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால் மட்டுமே இத்தகைய கொடுஞ்செயல் புரியும் அரக்கர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், இந்திய திருநாட்டில் பெண் குழந்தைகளுக்கும், சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை மாறுமளவில் அச்சட்டத்திருத்தம் அமைய வேண்டும் என்பதனை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story