ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 17-ந் தேதி பொதுக்கூட்டம்
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 17-ந் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
சென்னை,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், தெற்கு வீரபாண்டியபுரம் மற்றும் குமரெட்டியபுரம் கிராமத்தில் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்க பணிகளுக்கு இசைவாணை வழங்கிய, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசை கண்டித்தும், கடந்த 8-ந் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
காவல்துறை அனுமதி அளிக்க மறுத்த காரணத்தால் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் அனுமதி கோரப்பட்டு, அதன்படி வரும் 17-ந் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை உடனடியாக பரிசீலித்து அனுமதி அளிக்குமாறு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொதுக்கூட்டம்
இந்தநிலையில், மார்ச் 27-ந் தேதியிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிக்கையில் மார்ச் 31-ந் தேதியோடு ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்த இசைவாணை முடிவடைவதையும், அதனை புதுப்பித்து அனுமதி வழங்கக்கூடாது என்றும் எடுத்துரைக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு இந்த ஆண்டிற்கான இசைவாணையை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஆலை நிர்வாகத்திடம் வழங்க மறுத்துள்ளது.
எனினும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி அங்கு போராடும் மக்களோடு இணைந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வரும் 17-ந் தேதி மாலை 5 மணிக்கு தூத்துக்குடி எம்.ஜி.ஆர். திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த பொதுக்கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கண்டன உரை ஆற்ற உள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விடுக்கப்பட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story