கனிமொழி பற்றி எச்.ராஜா ‘டுவிட்’ பாரதீய ஜனதாவிற்கு ப.சிதம்பரம் கேள்வி
கனிமொழி பற்றி எச்.ராஜாவின் டுவிட்டிற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பா.ஜனதா தலைமைக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். #HRaja #BJP #PChidambaram
சென்னை,
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். செய்தியாளர்கள் சந்திப்பு நிறைவடையும்போது, பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் ஆளுநரிடம் கேள்வியொன்றை எழுப்பினார். அதற்கு பதிலளிக்காமல் ஆளுநர் அந்த பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தை தட்டினார். தன்னுடைய கேள்விக்கு பதிலளிக்காமல் ஆளுநர் கன்னத்தை தட்டியது குறித்து அந்த பெண் பத்திரிக்கையாளர் ட்விட்டரில் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இதனையடுத்து, பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பெண் பத்திரிக்கையாளரின் அனுமதியின்றி ஆளுநர் அவரை தொடுவது கண்ணியமான செயலல்ல என, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி டுவிட்டரில் பதிவிட்டார். “நோக்கம் தவறானதாக இல்லாது இருப்பினும், பொது வாழ்வில் இருப்போர், கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைபிடிப்பது அவசியம். பெண் பத்திரிக்கையாளரின் அனுமதி இல்லாமல், அவரை தொடுவது, கண்ணியமான செயலல்ல. சக மனிதருக்கு உரிய மரியாதையை அளிப்பது, பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை” என குறிப்பிட்டார் கனிமொழி.
இந்நிலையில் பா.ஜனதா தலைவர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே.’ என பதிவிட்டார். எச்.ராஜாவின் டுவிட்டிற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. எச்.ராஜா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாசாலையில் திமுக மகளிர் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.
பா.ஜனதா தலைவர் எச். ராஜா சர்ச்சைக்குரிய வகையில் பேசும் போது எல்லாம் அவருடைய தனிப்பட்ட கருத்து என பா.ஜனதா விலகிக்கொள்ளும். இதற்கிடையே பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், “பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக்கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின்தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத்தருகிறது.....” என குறிப்பிட்டு உள்ளார். ஆனால் எதையும் குறிப்பிடவில்லை.
எச்.ராஜா விவகாரத்தில் பா.ஜனதா தலைமைக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். ப.சிதம்பரம் தன்னுடைய டுவிட்டரில் ‘கள்ளக் குழந்தை என எதுவுமே இல்லை. எல்லாக் குழந்தைகளுமே நல்லக் குழந்தைகள்தான். பாரதீய ஜனதா இதில் தனது நிலையை தெளிவுபடுத்துமா?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கள்ளக் குழந்தை என்பதே தவறு. எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகள். ஏனென்றால் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தாய் ஒரு தந்தை இருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story