லோக் ஆயுக்தா அமைக்கும் பிரச்சினை:சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு கமல்ஹாசன் வரவேற்பு


லோக் ஆயுக்தா அமைக்கும் பிரச்சினை:சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு கமல்ஹாசன் வரவேற்பு
x
தினத்தந்தி 19 April 2018 11:00 PM GMT (Updated: 19 April 2018 7:09 PM GMT)

லோக் ஆயுக்தா பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளதுடன், ஊழல் என்னும் பிணியை கட்டுப்படுத்தும் மருந்தாகிய ‘லோக் ஆயுக்தாவை’ உடனடியாக தமிழக அரசு அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார். #KamalHaasan

சென்னை,

லோக் ஆயுக்தா பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளதுடன், ஊழல் என்னும் பிணியை கட்டுப்படுத்தும் மருந்தாகிய ‘லோக் ஆயுக்தாவை’ உடனடியாக தமிழக அரசு அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘லோக் ஆயுக்தா’ அமைக்கப்படாமல் இருப்பதற்கு, தமிழக அரசு முன் வைத்த காரணங்கள் ஏற்கும் படியாக இல்லை என்பதுடன், ‘லோக் ஆயுக்தா’ அமைக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த ஆணையை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது.

கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி ஒரு தனியார் கல்லூரியில் உரையாற்ற சென்றிருந்த போது, மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனிடம் மாணவர்கள் “நீங்கள் தமிழகத்தின் முதல்வரானால் முதல் கையெழுத்து எந்த உத்தரவில் போடுவீர்கள்?” என்று கேட்டதற்கு “லோக் ஆயுக்தா அமைப்பதற்குத்தான் முதல் கையெழுத்து போடுவேன்” என்று தெரிவித்து இருந்தார்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, இதுவரை ‘லோக் ஆயுக்தா’ அமைக்கத் தவறிய ஆளுவோருக்கு இது அவமானம். நமக்கு இது வெகுமானம். நமக்குத் தேவை ‘லோக் ஆயுக்தா’ தான். ஊழல் என்னும் பிணியைக் கட்டுப்படுத்தும் மருந்துகளில் ஒன்று ‘லோக் ஆயுக்தா’.

மேலும் தாமதிக்காமல், மேல் முறையீடு செய்யாமல் தமிழக அரசு உடனே ‘லோக் ஆயுக்தா’ அமைக்க உத்தரவிட வேண்டும். ‘லோக் ஆயுக்தா’ அமைப்பை மக்கள் நீதி மய்யம் பயன்படுத்தும். மக்களும் இதனை பயன் படுத்த வேண்டும்.

“எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்கிற பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது. ஊழலில் ஊறித் திளைத்தவர்களே, ஊழலுக்கு எதிரான ‘லோக் ஆயுக்தா’ அமைப்பை உருவாக்க நேர்ந்தது விதியின் விளையாட்டு அல்ல; நீதியின் விளையாட்டு.

இவர்களை, இவர்களது செயல்களை சுப்ரீம் கோர்ட்டு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நாமும் தான்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று காலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “சுப்ரீம் கோர்ட்டிற்கு தமிழ்நாட்டில் உள்ள நேர்மையாளர்களின் மனமார்ந்த நன்றி. இந்த அரசு(தமிழக அரசு) சுப்ரீம் கோர்ட்டு ஆணையை ஏற்று செயல்பட மக்கள் வலியுறுத்த வேண்டும். ‘லோக் ஆயுக்தா’, ஊழல் அரசியல் பிணியை தீர்க்கும் மருந்து” என்று தெரிவித்து உள்ளார்.

Next Story