வியாசர்பாடி ரெயில் நிலைய சுற்றுச்சுவரில் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஓவியம்
வியாசர்பாடி ரெயில் நிலைய சுற்றுச்சுவரில் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஓவியம்
திரு.வி.க. நகர்,
வியாசர்பாடி ரெயில் நிலைய சுற்றுச்சுவரில் தனியார் பள்ளி மாணவர்கள் சுத்தம், சுகாதாரம் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி கண்கவரும் வகையில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து உள்ளனர்.
சென்னை வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையத்தையொட்டி உள்ள ரெயில்வேக்கு சொந்தமான சுற்றுச்சுவரில் சிலர் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பாதையில் ரெயில் நிலையம் வந்து செல்லும் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
இதனை தவிர்க்கும் விதமாகவும், பொதுமக்களுக்கு சுத்தம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இயற்கை வளங்கள், விளையாட்டு, வளர்ச்சி, நாட்டுப்பற்று, இறைப்பற்று, போக்குவரத்து விதிமுறைகள், உடற்பயிற்சியின் அவசியம் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் வியாசர்பாடி எம்.கே.பி.நகரில் உள்ள விவேகானந்தா வித்யாலயா ஜூனியர் காலேஜ் என்ற தனியார் பள்ளி சார்பில், அந்த பள்ளி மாணவ-மாணவிகள் ரெயில்வே சுற்றுச்சுவரில் பல்வேறு விதமான விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து உள்ளனர்.
டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுப்பது, மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள், விபத்தை தவிர்க்க இருசக்கர வாகனங்களில் செல்போன் பேசியபடி செல்லக்கூடாது, குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்பது போன்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான ஓவியங்களை கண்கவரும் வண்ணங்களில் வரைந்து உள்ளனர்.
அத்துடன் அப்துல்கலாம் உருவ படம் மற்றும் இயற்கை காட்சிகளையும் தத்ரூபமாக வரைந்து உள்ளனர். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் கடந்த 10 நாட்களாக இந்த ஓவியங்கள் வரையும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதிகளில் உள்ள சுவர்களை தேர்ந்தெடுத்து இதேபோன்ற தங்கள் பள்ளி மாணவ-மாணவிகளை கொண்டு ஓவியங்கள் வரையப்படும் என்றும் அந்த தனியார் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இது குறித்து ஓவியம் வரையும் பணியில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் கூறும்போது, “அசுத்தத்தை போக்கி, சுத்தத்தை ஏற்படுத்தும் இந்த ஓவியங்களை பார்த்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். எங்களது இந்த முயற்சிக்கு ஆதரவு தரும் வகையில் இந்த சுவர் பக்கம் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட சுகாதாரமற்ற செயல்களை பொதுமக்கள் தவிர்க்கின்றனர். இதை பார்க்கும்போது எங்களுக்கு பெருமையாக உள்ளது. வரும் விடுமுறை நாட்களிலும் இதுபோன்ற எங்களின் முயற்சிகள் தொடரும்” என்றனர்.
இதுபற்றி பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, “இதுபோன்ற பொது சுவர்களில் ஓவியங்கள் வரையப்படுவதால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுகிறது. மாணவர்களின் திறமையும் வெளிப்படுகிறது. இதற்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் பெரும் ஆதரவு கிடைக்கிறது. பொதுமக்கள் அவர்கள் பகுதிகளில் உள்ள அசுத்தமான சுவர்களில் இதுபோன்ற ஓவியங்கள் வரைந்து கொடுக்குமாறு கேட்டு வருகின்றனர். அதற்கான செலவு தொகையை அவர்களே ஏற்பதாகவும் கூறி எங்களிடம் ஆதரவு கேட்பதை நினைக்கும்போது எங்கள் மாணவ-மாணவிகளை நினைத்து பெருமை கொள்கிறோம்” என்றனர்.
Related Tags :
Next Story