தூத்துக்குடியில் 28-ந் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொதுக்கூட்டம் வைகோ அறிவிப்பு


தூத்துக்குடியில் 28-ந் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொதுக்கூட்டம் வைகோ அறிவிப்பு
x
தினத்தந்தி 20 April 2018 4:00 AM IST (Updated: 20 April 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 28-ந் தேதி ம.தி.மு.க. சார்பில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதாக வைகோ தெரிவித்துள்ளார். #Vaiko

சென்னை, 

தூத்துக்குடியில் 28-ந் தேதி ம.தி.மு.க. சார்பில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ம.தி.மு.க. 1995-ம் ஆண்டிலேயே ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதை கடுமையாக எதிர்த்தது. 1996, 2001, 2004, 2006, 2014 பொதுத் தேர்தல்களிலும், உள்ளாட்சி தேர்தல்களிலும், தூத்துக்குடியில் தெருத்தெருவாகச் சென்று, நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று, காரணங்களை மக்களிடம் விளக்கினேன்.

தூத்துக்குடியை ஒட்டியுள்ள சிறுசிறு தீவுகளால் அமைந்துள்ள தேசிய கடல் பூங்காவுக்கு 25 கிலோ மீட்டருக்கு அப்பால்தான் இத்தகைய ஆலையை அமைக்க முடியும் என்று சுற்றுச்சூழல் விதிகள் திட்டவட்டமாகக் கூறுகின்றன. ஆனால், அவற்றைப் புறந்தள்ளி, 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு உள்ளாகவே ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆலைக்குள் 250 மீட்டர் அகலத்திற்கு பசுமை அடர்த்தி அமைக்க வேண்டும் என்ற விதியை, அன்றைய தமிழக அரசு 7 நாட்களில் மாற்றி, 25 மீட்டர் அகலத்திற்கு இருந்தால்போதும் என்று திருத்தியது. இந்த 2 காரணங்களையும் என் வாதத்தில் வைத்ததால்தான், சென்னை ஐகோர்ட்டு, 2010-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி, இக்காரணங்களையே சுட்டிக்காட்டி, ஆலையை நிரந்தரமாக மூடத் தீர்ப்பு அளித்திருந்தது.

ஸ்டெர்லைட் நச்சு ஆலையால், தூத்துக்குடி பகுதியில் பலர் புற்றுநோய்க்கு ஆளாகி இருக்கின்றனர்; நுரையீரல் பாதிக்கப்படுகின்றது; தோல் நோய்களும் ஏற்படுகின்றன. அதனால், இன்று சாதி, மதம், கட்சிகளைக் கடந்து, ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்துள்ளனர்.

தற்போதும் தமிழக அரசு மக்களை ஏமாற்ற, ‘ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதியைத் தொடர்ந்து வழங்கவில்லை’ என்று கூறி, ஆலையை மூடுவதற்கு முயல்வதைப் போல ஒரு நாடகம் ஆடுகின்றது.

ஆனால், போராட்டம் தணிந்தபின்னர், ஆலையை மீண்டும் திறப்பதற்குத் தமிழ்நாடு அரசே ஏற்பாடு செய்யும் என்பதால், தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து மக்களிடமும், மீண்டும் ஒரு போராட்டக் கனலை மூட்டி, ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முடிவு எடுத்திருக்கின்றேன்.

22 ஆண்டுகளாகப் போராடி வந்துள்ளேன்; தற்போது, தூத்துக்குடியைச் சுற்றிலும் கிராமங்களில் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டுள்ளேன். எனது பிரசாரப் பயணம் நிறைவு பெற்ற பின், ஏப்ரல் 28-ந் தேதியன்று மாலை 5 மணிக்கு தூத்துக்குடி மாநகரில் மாபெரும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது.

கட்சி தொண்டர்களும், பொது நலனில் அக்கறை உள்ளவர்களும், மீனவர்கள், விவசாயிகள், வணிகப் பெருமக்கள், மாணவர்கள், பெருமளவில் பங்கேற்க வேண்டும் என இருகரம் கூப்பிக் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story