தமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்


தமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்
x
தினத்தந்தி 21 April 2018 10:19 AM GMT (Updated: 21 April 2018 10:19 AM GMT)

தமிழகத்தில் வழக்கத்தை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆந்திராவில் வீசும் வெப்பக்காற்றை பொறுத்து தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இருக்கும்.

சேலம்

அதிக வெப்பமான முதல் நாளான நேற்று சென்னையில் 36.60 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் நேற்று 39 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பதிவாகியிருந்தது.

தமிழகத்துக்கு கிழக்குப் பகுதியில் இருந்து வீசும் காற்றின் திசை, மேற்கு திசையில் இருந்து மாறும் போது இப்படி வெப்பநிலை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கடற்கரை காற்றால் சென்னை மக்கள் ஓரளவுக்கு தப்பி வருகிறார்கள். கடும் வெப்பத்தை கடல் காற்று ஓரளவுக்கு கட்டுப்படுத்தும். ஆனால், வெள்ளிக்கிழமை போதிய கடல்காற்று இல்லாததே வெப்பத்துக்குக் காரணம். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இணையப் பக்கத்தில், நேற்று இரவு 9 மணிக்குக் கூட 31 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையே நீடித்தது. 82 சதவீதம் அளவுக்கு புழுக்கம் காணப்பட்டது.

வானிலை பற்றி அறிவிப்புகளை வெளியிடும் பிரதீப் ஜான் இது குறித்து கூறுகையில், மிக பலமான கடற்கரை மேகக் கூட்டங்கள், கடற்காற்றை தரைப் பகுதிக்கு வர விடாமல் தடுத்ததாகப் பதிவிட்டுள்ளார்.

அடுத்து வரும் நாட்களில், வெப்பநிலையானது இதே போல 35 டிகிரி செல்சியஸ் முதல் 36.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் ஏற்கனவே 40 டிகிரி செல்சியஸை கடந்துவிட்டது. கரூர் பரமதியில் 41.2 டிகிரி, வேலூரில் 41.1 டிகிரி, திருத்தணியில் 41 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
வடகிழக்கு  பருவ மழை தான் முக்கியமான மழைகாலம்.  ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில்  அந்த மழை எவ்வளவு பெய்யும் என தெரியவரும். இயல்பாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

பெரிய அளவு பாதிப்புகள் ஏற்படாத வகையில் எந்த மாதிரி நிகழ்வுகளும் இப்போது இல்லை. தமிழ் நாட்டின் வடகிழக்கு பருவமழை சராசரி 44  செ.மீட்டர் ஆகும்.
காவிரி  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு  ஏற்றமும், இறக்கமாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட அளவு செல்ல முடியாது. சில பகுதிகளில் ஏறும், சில பகுதிகளில் இறங்கும். குறிப்பிட்ட இடங்களில் இறங்கி கொண்டே போகிறது. 

இப்போதைக்கு வெயில் இயல்பையொட்டி இருக்கிறது. குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் பகுதிகளில் தான் 1 டிகிரி, 2 டிகிரி இயல்பை விட வெயில் அதிகமாக இருக்கிறது. மே மாதத்திற்கு அடுத்த சீசனில் வெயில் அதிகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதாவது வட மேற்கு மாவட்டங்களான கிருஷ்ணகிரி, சேலம் தர்மபுரி மாவட்டங்களில் தான் வெயில் அதிகமாக இருக்கும்.

தமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆந்திராவில் வீசும் வெப்பக்காற்றை பொறுத்து தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இருக்கும். இந்திய அளவில் கடந்தாண்டைவிட இந்த ஆண்டு 90% அளவுக்கு மழை இருக்கும் இவ்வாறு அவர் கூறினார்.

Next Story