‘நீட் தேர்வு மைய ஒதுக்கீட்டை சரிவர கையாளவில்லை’ சி.பி.எஸ்.இ. மீது டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு


‘நீட் தேர்வு மைய ஒதுக்கீட்டை சரிவர கையாளவில்லை’ சி.பி.எஸ்.இ. மீது டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 21 April 2018 7:57 PM GMT (Updated: 21 April 2018 7:57 PM GMT)

கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை அடியோடு சிதைக்கும் நீட் தேர்வு ஒரு அநீதி என்று நாம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் சூழலில், நீட் தேர்வின் நடைமுறை என்பது அதை காட்டிலும் அநீதியாக உள்ளது. TTV.Dinakaran

சென்னை,

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை அடியோடு சிதைக்கும் நீட் தேர்வு ஒரு அநீதி என்று நாம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் சூழலில், நீட் தேர்வின் நடைமுறை என்பது அதை காட்டிலும் அநீதியாக உள்ளது.

தமிழகத்தை சார்ந்த பல மாணவர்களுக்கு வெளிமாநிலத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்திருப்பதால், அம்மாணவர்கள் பெற்றோரோடு 2 நாட்களுக்கு முன்னரே அம்மாநிலங்களுக்கு புறப்பட்டுச் சென்று, தங்கி தேர்வு மையத்தை அடையாளம் காண்பதென்பது அவர்களுக்கு பெரும் சிரமத்தையே ஏற்படுத்தும்.

மேலும், தேர்வு எழுதும் மாணவர்கள் அணியும் ஆடை, அணிகலன்கள் முதற்கொண்டு ஏதோ அந்நிய நாட்டிற்கு சென்றதுபோல், பல கட்டுப்பாடுகளை சி.பி.எஸ்.இ. விதித்திருப்பது, மாணவர்கள் தேர்வு மையத்திற்கு உள்நுழைவதற்கு முன்பே அவர்களை மன உளைச்சலுக்கு உண்டாக்கும் செயல். இதனால் தேர்வில் சரியான கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

நீட் தேர்வின் மூலம் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ள மத்திய அரசுக்கும், தேர்வுமுறைகளையும், தேர்வுமைய ஒதுக்கீட்டையும் சரிவர கையாளாத சி.பி.எஸ்.இ.க்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story