நான் தலைமறைவாக இல்லை, 3 நாட்களில் சென்னை திரும்புவேன் - எஸ்.வி.சேகர்


நான் தலைமறைவாக இல்லை, 3 நாட்களில் சென்னை திரும்புவேன் - எஸ்.வி.சேகர்
x

நான் தலைமறைவாகவில்லை, மூன்று நாட்களில் சென்னை திரும்புவேன் என எஸ்.வி. சேகர் கூறிஉள்ளார். #SveShekhar

சென்னை,

தமிழக பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகரின் ‘முகநூல்’ பக்கத்தில், பத்திரிகையாளர்களையும், பெண் பத்திரிகையாளர்களையும் இழிவுபடுத்தி கருத்து வெளியிடப்பட்டிருந்தது. எஸ்.வி.சேகரின் செயலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்ததோடு, அவர் மீது பத்திரிகையாளர்கள் புகார் அளித்தால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்தநிலையில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம், பெண் பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். எஸ்.வி.சேகரை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர். மாவட்ட போலீஸ் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில், அளிக்கப்பட்ட புகார் மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் ‘சைபர் கிரைம்’ போலீசார் எஸ்.வி.சேகர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், உள்நோக்கத்துடன் குறிப்பிட்ட பிரிவினரை வன்முறைக்கு தூண்டுவது, தனிப்பட்ட நபர்கள் மீது அவதூறு பரப்புதல், பெண்களை இழிவுப்படுத்தல் மற்றும் பெண்கள் வன்கொடுமை சட்டம் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து எஸ்.வி. சேகரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே அவர் தலைமறைவு ஆகிவிட்டார் எனவும் செய்திகள் வெளியாகியது.

இந்நிலையில் தந்தி டிவிக்கு பேட்டியளித்து பேசிய எஸ்.வி. சேகர், நான் தலைமறைவாக இல்லை, சொந்தவேலை காரணமாக பெங்களூரு வந்துள்ளேன், இன்னும் 3 நாட்களில் சென்னை திரும்புவேன் என கூறிஉள்ளார். 

Next Story