பெண்மையை இழிவுபடுத்தும் எச்.ராஜா, எஸ்.வி.சேகரை உடனடியாக கைது செய்ய வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


பெண்மையை இழிவுபடுத்தும் எச்.ராஜா, எஸ்.வி.சேகரை உடனடியாக கைது செய்ய வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 April 2018 12:30 AM IST (Updated: 23 April 2018 12:03 AM IST)
t-max-icont-min-icon

பெண்மையை இழிவுபடுத்தும் எச்.ராஜா, எஸ்.வி.சேகரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். #Ramadoss

சென்னை, 

பெண்மையை இழிவுபடுத்தும் எச்.ராஜா, எஸ்.வி.சேகரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கல்லூரி மாணவிகளுக்கு அவர்களின் பேராசிரியையே பாலியல் வலை வீசிய விவகாரம், செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளரிடம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நடந்துகொண்ட விதம் ஆகியவற்றைத் தொடர்ந்து பா.ஜ.க.வைச் சேர்ந்த எச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் தெரிவித்த கருத்துகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. அவர்கள் குடும்பத்தின் பெண் உறுப்பினர்களால் கூட ஏற்கமுடியாதவை.

பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையிலான கருத்தை வழி மொழிந்ததற்காக எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கருணாநிதி மற்றும் கனிமொழி குறித்த அவதூறுகளுக்காக எச்.ராஜா மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழகத்தில் ஆட்சியாளர்களின் தவறுகளையும், ஊழல்களையும் அம்பலப்படுத்தும் அரசியல் தலைவர்கள் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும், அவதூறு வழக்குகளைப் பதிவு செய்யும் தமிழக அரசு, ஒட்டுமொத்த தமிழகத்தையே அவதூறாக பேசும் ராஜா மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது ஏன்?. தமிழக ஆட்சியாளர்களுக்கு ராஜா மீது அந்த அளவுக்கு அச்சமா?. பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக பா.ஜ.க. அலுவலக தூண்களின் கால்களில்கூட விழுந்து கிடக்கக்கூடாது.

பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் எச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதே நேரத்தில் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியதற்காக எஸ்.வி.சேகர் வீட்டுமுன் போராட்டம் நடத்திய செய்தியாளர்கள் திடீரென கல்வீச்சில் ஈடுபட்டது ஏற்கமுடியாதது. எனினும், அவர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story