தேசிய லோக் அதாலத் மூலம் தமிழகத்தில் 74 ஆயிரம் வழக்குகள் முடிவுக்கு வந்தன நீதிபதி தகவல்
நாடு முழுவதும் நேற்று நடந்த தேசிய லோக் அதாலத்தில், தமிழகத்தில் 74 ஆயிரம் வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன.
சென்னை,
நாடு முழுவதும் நேற்று நடந்த தேசிய லோக் அதாலத்தில், தமிழகத்தில் 74 ஆயிரம் வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன. இதன்மூலம் பயனாளிகளுக்கு ரூ.285 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று சட்டப்பணி ஆணைக்குழு நீதிபதி கூறினார்.
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வர, ‘தேசிய லோக் அதாலத்’ என்ற மக்கள் நீதிமன்றம் 2 மாதங்களுக்கு ஒரு முறை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், இந்த தேசிய லோக் அதாலத் நேற்று நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்த லோக் அதாலத்தில், இருதரப்பினரையும் அமர வைத்து பேச்சுவார்த்தை மூலம், சமரசத்தை உருவாக்கி, அதன் மூலம் இருதரப்பினரின் சம்மதத்துடன் அவர்களது வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது.
இதற்காக ஐகோர்ட்டு நீதி பதிகள், மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் தலைமையில் அமர்வுகள் அமைக்கப்படுகின்றன. சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.விமலா, புஷ்பா சத்தியநாராயணா, டி.கிருஷ்ணகுமார், எம். கோவிந்தராஜ், எஸ்.எம். சுப்பிரமணியம், பவானி சுப்பராயன், எம்.தண்டபாணி, பி.டி.ஆதிகேசவலு, எஸ்.ராமதிலகம், ஆர். பொங்கியப்பன் ஆகியோர் தலைமையில் 10 அமர்வுகள் அமைக்கப்பட்டன.
ஐகோர்ட்டு மதுரை கிளையில் 6 நீதிபதிகள் தலைமையில் 6 அமர்வுகளும், மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள் என்று தமிழகம் முழுவதும் மொத்தம் 426 அமர்வுகள் அமைக்கப்பட்டன.
இந்த அமர்வுகளில், ‘செக்’ மோசடி, வங்கி கடன், தொழிலாளர் தொடர்பான வழக்குகள், மின்சாரம், நில ஆர்ஜிதம், மோட்டார் வாகன விபத்து என்று பல விதமான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருதரப்பினரின் சம்மதத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக் குழுவின் உறுப்பினர் செயலாளர் நீதிபதி ஏ.நசீர்அகமது விடம் கேட்டபோது, ‘ஞாயிற்றுக்கிழமையான நேற்று நாடு முழுவதும் தேசிய லோக் அதாலத் நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய லோக் அதாலத் மாலை 5 மணிக்கு முடிந்தது. மாலை 6 மணி நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 74 ஆயிரத்து 518 வழக்குகள் சமரசத்தின் அடிப்படையில் முடிவுக்கு வந்துள்ளன. இதன் மூலம் 285 கோடியே 6 லட்சத்து 37 ஆயிரத்து 191 ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
Related Tags :
Next Story