‘தமிழகம் ஆபத்தான நிலையில் இருக்கிறது’ தொண்டர்களின் கேள்விக்கு கமல்ஹாசன் பதில்


‘தமிழகம் ஆபத்தான நிலையில் இருக்கிறது’ தொண்டர்களின் கேள்விக்கு கமல்ஹாசன் பதில்
x
தினத்தந்தி 23 April 2018 5:15 AM IST (Updated: 23 April 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

தொண்டர்களின் கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், தமிழகம் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறினார். #KamalHassan

சென்னை, 

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ‘யூ-டியூப்’ மூலம் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இணையதளம் மூலம் அனுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி: மக்கள் நீதி மய்யத்தின் தன்னார்வலர்கள் என்ன செய்ய வேண்டும்?

பதில்: நீர் நிலைகளை சுத்தப்படுத்துவதும், அதை காப்பாற்றுவதும் பெருங்கடமை. மேலும், பள்ளிகள் திறந்த உடன், அங்கே போய் தன்னார்வலர்கள் உதவி செய்யலாம். பல பள்ளிகளில் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள், இன்னும் சில பள்ளிகளில் மின்சாரம் இல்லாமல் உள்ளனர். எனவே பல உதவிகள் செய்யலாம். பள்ளிகள் தான் மன விவசாயத்துக்கான நிலம். அதனால் அதை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

வெகு விரைவில் உங்கள் கையில் ‘மய்யம் விசில் ஆப்’ இருக்கும். அதன் மூலம், இது போன்ற குறைகள் இருக்கிறது என்று மீண்டும் மீண்டும் நாம் அரசுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருந்தால், அவர்கள் அதற்கு ஆவன செய்தே ஆக வேண்டும் என்ற நிலை வரும். விவசாயிகள், போராட்டக்காரர்கள் கேட்டுக்கொண்டு இருப்பார்கள் சீசன் முடிந்ததும் விட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள்.

மாம்பழத்தை வேண்டுமானால் சீசன் இல்லாத நேரத்தில் வேண்டாம் என விட்டு விடலாம். ஆனால், குடி தண்ணீரில், அப்படி விட்டுவிட முடியாது. அதை மறந்து விடுவார்கள் என்று நினைத்தால் அதைவிட பெரிய அரசியல் முட்டாள் தனம் இருக்க முடியாது. ‘மய்யம் விசில் ஆப்’ மூலம் எங்கே குறைகள், அக்கிரமங்கள் நடக்கிறதோ அதை படம் பிடித்து காட்ட முடியும். அதை எந்த அதிகாரியிடம் கொண்டு சேர்க்க வேண்டுமோ அதற்கான வேலைகளை நாங்கள் செய்வோம்.

நாளை நமக்கு ஒரு பொறுப்பு என்று வரும்போது நாம் சரியாக பணியாற்றுகிறோமா என்பதை நம்மை நாமே பார்த்துக்கொள்ளும் கண்ணாடியாகவும் இந்த ‘ஆப்’(செயலி) இருக்கும்.

கேள்வி: எப்போது நீங்கள் அரசியலில் நுழைய முடிவு செய்தீர்கள்? அப்போது உங்கள் மன ஓட்டம் எவ்வாறாக இருந்தது?

பதில்: இது ஏதோ ஒரு கண நேரத்தில் எடுத்த முடிவு அல்ல. இது பல நாட்கள் யோசித்து எடுக்க வேண்டிய முடிவு. உண்மையை சொல்வது என்று சொன்னால் பலப்பல வருடங்களாக என்பது தான் உண்மை. நான் மதிக்கும் பெரும் வீரர்களான மகாத்மா காந்தி, பெரியார் ஆகியோர் ஓட்டு அரசியலுக்கு வரவில்லை. அவர்கள் வழியில் நாமும் இருந்துவிட்டு போகலாமே என்று தான் இத்தனை நாள் சும்மா இருந்தேன்.

ஆனால், அவர்கள் இருந்திருந்தாலே இப்போது ஓட்டு அரசியலுக்கு வரவேண்டிய அவசியம் வந்திருக்கும். அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி திருத்துவதற்கு நேரம் இருந்தது. எனக்கு நேரம் இல்லை. இன்னொன்று நமது அஜாக்கிரதையினால், அரசியலை அவ்வளவு மோசமான நிலைக்கு நாமே கொண்டு தள்ளிவிட்டோமோ என்ற குற்ற உணர்வும் கூட இருக்கிறது. ஓட்டுப்போடுவதோடு மட்டும் அல்லாமல், ஓட்டு போட்டு வந்தவர்கள் சரிவர அரசியல் பணிகளை செய்கிறார்களா? என்பதை மக்கள், ஊடகங்கள் எல்லோரும் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டோமோ என்ற பதட்டம் எனக்கு இருந்தது.

நான் கொஞ்சநாட்கள் ஊடகங்களில் முயற்சி செய்து பார்த்தேன். அவைகள் எல்லாம் தீர்வு காணும் கருவிகளாக எனக்கு தோன்றவில்லை. அவை ஆராய்ச்சி மணி தான். ஆட்சியாளர்கள் அதற்கு பதில் சொல்லாததுடன், எதற்கு பதில் சொல்ல வேண்டும் என்ற திமிரும்? அவர்களிடையே வந்துவிட்டது. அந்த திமிரை அங்கே கொண்டு சேர்த்ததே நாம் தான். அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்ற கோபம், ஆதங்கம், எல்லாம் சேர்ந்து படிப்படியாக என்னை ஏற்றி, தள்ளி இங்கு(அரசியலில்) கொண்டு வந்து சேர்த்துள்ளது.

முன்பு என்னிடம் அரசியலில் நீங்கள் ஏன் குதிக்கவில்லை என்று கேட்பார்கள். அவ்வளவு உயரம் குதித்தால் கால் ஒடிந்து போய்விடும் என்று சொல்வேன். ஆனால், இப்போது நான் உணர்கிறேன் அது விளையாட்டுக்கு சொல்லலாமே தவிர, உண்மையாக அரசியல் செய்ய வேண்டியவர்கள் மக்களை நோக்கி படியேறி செல்ல வேண்டும். பக்தர்கள் எப்படி படியேறி சென்று சாமி கும்பிட்டுவிட்டு வருவார்களோ அதே போன்று நாம் தான் ஏறி போக வேண்டும். நான் மக்களின் நிலைக்கு ஏறி வந்து கொண்டிருக்கிறேன்.

கேள்வி: அரசியலுக்கு வந்த பின் ஏண்டா வந்தோம் என்று தோன்றுகிறதா?

பதில்: இல்லை. அப்படி தோன்றவில்லை. ஏண்டா வந்தோம் என்று சிலரை பார்த்து கேட்க தோன்றுகிறது. அது தேவையில்லை. அவர்கள் எப்படியும் கணக்கில் வரமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது.

கேள்வி: நமது அரசியல் ஆக்கபூர்வமான செயலை நோக்கியா? அல்லது அதிகாரத்தை மட்டும் நோக்கியா?

பதில்: அதிகாரத்தை மட்டும் நோக்கி செல்வது ஒரு அரசன் செய்யும் வேலை. அதிகாரத்தை மட்டும் நோக்கி சென்று என்ன செய்வது? அது மக்களுக்காக செய்யும் விஷயம் கிடையாது. நல்ல அரசியல் மக்களை நோக்கித்தான் இருக்க வேண்டும். நான் நல்ல அரசியல் தான் செய்ய வேண்டும் என்ற ஒரு திண்ணமான முடிவுடன் தான் வந்திருக்கிறேன்.

கேள்வி: வருகின்ற தேர்தலில் நீங்கள் முதல்வரா? எதிர்க்கட்சி தலைவரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: நான் நினைப்பது இருக்கட்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அது தான் முக்கியம். நீங்கள்(மக்கள்) முடிவு செய்யுங்கள் நான் என்னவாக இருக்க வேண்டும் என்று. அதுபடி இருந்து கொள்கிறேன். அது தான் கட்டளை.

கேள்வி: வறுமையின் நிறம் சிவப்பு. அதை போக்கும் நிறமும் சிவப்பா?

பதில்: நமது சமுதாயத்தில் இருக்கும் சதுர்வர்ணம், சாதி கொடுமை தான் வறுமைக்குக் கூட காரணமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒருத்தரை இப்படித்தான் இருக்க வேண்டும், இவ்வளவு தான் உனக்கு, இதற்கு மேல் சாப்பிடக்கூடாது. உன் வீட்டு வாசல் கூட இந்த உயரத்துக்கு மேல் இருக்கக்கூடாது என்று சொல்லி வைத்த சமுதாயம். இப்படித்தான் வாழ வேண்டும் என்று முடிவு செய்யும் போது, இவ்வளவு சாப்பிட்டால் போதும் என்ற முடிவும் வந்துவிடும். எனவே வறுமை உருவாக்கப்படுவது தான். வறுமைக்கு நிறமே கிடையாது.

கேள்வி: நீங்கள் தத்தெடுக்கப்போகும் கிராமங்கள் பட்டியலை எப்போது வெளியிடுவீர்கள்?

பதில்: நாங்கள் அதிகத்தூர் என்ற பெயரை அறிவித்து இருக்கிறோம். அடுத்தபடியாக மெது மெதுவாக அறிவிக்க இருக்கிறோம். கிராமத்தை தத்தெடுக்கிறோம் என்ற பெயரில் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுவிட்டு வந்தால் போதாது. அதையும் தாண்டி, எல்லா நல்ல நாட்களிலும், கெட்ட நாட்களிலும் அவர்களுடன் நிற்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

கேள்வி: கிராமிய வளர்ச்சி பணியில் ஈடுபடும் போது ஏற்கனவே இருக்கும் கட்சிகள் பிரச்சினை ஏற்படுத்தினால் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

பதில்: வன்முறை இல்லாமல் நியாயமாக, ஆனால் எதிர்கொண்டே ஆக வேண்டும். மக்கள் நலன் செய்ய தடைசெய்பவர்கள் தேசத்துரோகிகள். அவர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ அப்படி எதிர்கொள்ள வேண்டும். ஆனால், வன்முறை செய்யக்கூடாது.

கேள்வி: இன்றைய சூழ்நிலையில் ஒரு விவசாயிக்கு பெண் கொடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கும் போது இளைஞர்கள் எப்படி விவசாயத்துக்கு வருவார்கள் என்று நம்புகிறீர்கள்?

பதில்:- இதுபோன்ற மனப்போக்கை மாற்ற முடியும். அதற்கு உதாரணமே சினிமாத்துறை. இன்றைக்கு நாட்டை எப்படி முன்னேற்றலாம் என்று பேசிக்கொண்டு இருக்கிறேன். எனக்கு முன்னோடிகளாக பல நடிகர்கள் இங்கே வந்து சீர்திருத்தத்தை செய்தும் காட்டி இருக்கிறார்கள். அந்த நிலை எப்படி மாறியதோ? அதுபோன்றே இந்த நிலையும் மாறும்.

கேள்வி: வெறும் வணிகம் சார்ந்து செயல்படும் நமது மக்களிடம் கிராம சுவராஜ்யம் சாத்தியமா?

பதில்: கிராம சுவராஜ்யம் சாத்தியமே. வெறும் வணிகம், வணிகம் என்று அலைந்து கொண்டிருந்த ஐரோப்பா, ஒரு பிளேக் நோய் தாக்கத்தின் போது, நிலையாமையை உணர்ந்தனர். எல்லோரும் நாட்டுக்காக சமூக சேவையில் ஈடுபட்டு பள்ளிகள், ஆஸ்பத்திரிகள், அழகழகான கட்டிடங்களை கட்டி புது உலகத்தையே ஏற்படுத்தினார்கள். காரணம் ஒரு ஆபத்தான நிலை நாட்டுக்கு வந்திருக்கிறது, இதில் இருந்து மீள வேண்டும் என்ற ஒரு புரிதலும் நிலையாமையை புரிந்ததனாலும் நடந்தது. இன்று அந்த நிலையில் தமிழகம் இருக்கிறது. நிலையாமை 63 வயதில் எனக்கு புரிகிறது.

கேள்வி: குழந்தைகள் மீதான குற்றங்களை தவிர்க்க எந்த மாதிரியான சட்டங்களை கொண்டு வருவீர்கள்?

பதில்: இப்போது கூட 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை கற்பழித்தவர்களுக்கு மரண தண்டனை என்று கூறியிருக்கிறார்கள். அப்போது 14, 15, 16 வயதினரும் குழந்தைகள் தானே.

அதைவிட முக்கியமான சட்டம், அரசாட்சி செய்வதைவிட, நாம் கடைபிடிக்க வேண்டிய சட்டத்தை மனசாட்சி செய்ய வேண்டும். அது வீட்டில் பெண்களை எவ்வளவு ஜாக்கிரதையாக வளர்க்கிறோமோ? அதே போன்று ஆண் பிள்ளைகளையும் பொறுப்புடன் வளர்க்க வேண்டும். பெண்களுக்கு சொல்லித்தரப்படும் கற்பும், நேர்மையும் ஆண்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த சட்டத்தை அரசு கொண்டு வரவேண்டியது அல்ல. ஒவ்வொரு குடும்பமும் கொண்டு வர வேண்டும்.

கேள்வி: சாதி ஒழிப்பில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா? அதற்கு நீங்கள் வகுக்கும் பாதை என்ன?

பதில்: கண்டிப்பாக அது ஒழிக்கப்பட வேண்டிய ஒரு நோய். அதற்கு தேர்ந்தெடுக்கும் பாதை நாம் முடிவு எடுப்பது தான். இன்னொருவர் செய்வார் என்று பார்க்காமல், ஒவ்வொருவரும் தனித்தனியாக நான் சாதி பார்க்க மாட்டேன் என்று முடிவு எடுத்து கொள்ள வேண்டும். அப்படி முடிவு எடுத்தவர்களை சமுதாய வீரர்களாக மதித்து பாராட்டினால் கண்டிப்பாக அது ஒழியும். இது இன்று ஆரம்பித்தால் நம் பேரப்பிள்ளை அனுபவிக்கும் நல்ல விஷயமாக இருக்கும்.

சாதி என்றால் என்ன? அப்படி என்றால் என்ன? அப்படி எல்லாம் நடந்ததா? என்று குழந்தைகள் கேட்கும் காலம் வந்தால் தான் சாதி ஒழிந்ததாக அர்த்தம். ஆனால், அதை நாம் இருந்து பார்ப்போமா என்பது தெரியாது. ஆனால், அதற்கான விதையை நாம் தூவி விட்டுத்தான் செல்ல வேண்டும்.

கேள்வி: கடைமட்ட தொண்டனின் உணர்வுக்கு மதிப்பளித்து அவர்களது கருத்துக்கு செவிசாய்ப்பீர்களா?

பதில்: இந்த கட்சியில் அதை ஒரு கொள்கையாகவே வைத்து இருக்கிறோம். அதற்கு உதாரணம் நானே. என்னை நான் ஒரு கடைமட்ட தொண்டனாகவே நினைத்துக் கொண்டு இருக்கிறேன். இந்த கட்சியின் ஆரம்ப ரசிகன் நான். கடைசி வரை தொண்டனாக இருக்கப் போகிறேன் என்பதை முடிவு செய்துகொண்டுதான் கட்சியையே தொடங்கி இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

கமல்ஹாசன் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை ஒரு மணி நேரம் யூ-டியூபில் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அவர் காலை 11.02 மணி வரை 32 நிமிடங்கள் பேசினார். அந்த நேரடி ஒளிபரப்பை 19 ஆயிரத்து 759 பேர் யூ-டியூப்பில் நேரடியாக பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story