கூட்டுறவு வங்கி முறைகேடு வழக்கு: கூடுதல் டி.ஜி.பி. நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு


கூட்டுறவு வங்கி முறைகேடு வழக்கு: கூடுதல் டி.ஜி.பி. நேரில் ஆஜராக  ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 23 April 2018 11:00 PM GMT (Updated: 23 April 2018 8:09 PM GMT)

கூட்டுறவு வங்கி முறைகேடு வழக்கு தொடர்பான ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.க்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.30 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் வங்கி மேலாளர் ஜான் பாஷா உள்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு பூந்தமல்லி கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி பாபு என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

தீ வைப்பு

இந்த வழக்கிற்கு பதிலளித்த நபார்டு வங்கி, ‘வங்கியில் நகைக்கடன் கொடுத்ததில் ரூ.9.63 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. மேலும், சாட்சி ஆவணங்களை அழிப்பதற்காக வங்கிக்கு தீ வைக்கப்பட்டுள்ளது’ என்று கூறியிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தனி நீதிபதி மறுத்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து பாபு மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

தடை

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த முறைகேடு வழக்கை போலீசார் சரியாக விசாரிக்கவில்லை. தீ விபத்து நடந்ததா? அல்லது திட்டமிட்டு தீ வைக்கப்பட்டதா? என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. போலீசாரின் விசாரணையில் எங்களுக்கு திருப்தியில்லை. எனவே, இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களுடன், பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. வருகிற ஜூன் 12-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும். அதுவரை பூந்தமல்லி கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை விசாரிக்க தடை விதிக்கின்றோம்’ என்று உத்தரவிட்டனர். 

Next Story