பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கிறதா? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கிறதா? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 23 April 2018 11:30 PM GMT (Updated: 23 April 2018 9:18 PM GMT)

பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கிறதா? என்பதற்கு, தேர்தல் வரும்போது முடிவு தெரியும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை, 

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேட்டில் யார் வேண்டுமானாலும் கட்டுரை எழுதலாம். ஆனால் எங்களின் நிலைப்பாடு என்னவென்றால், மத்திய அரசின் பல திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். எல்லா துறைகளுக்கும் மத்திய அரசின் நிதியை பெற்று செயல்படுத்தி வருகிறோம். அதற்கு ஒரு இணக்கமான சூழ்நிலை தேவைப்படுகிறது.

ஆனால், அரசியல் ரீதியான இணக்கமான சூழ்நிலையை தனிப்பட்ட முறையில் எடுக்க முடியாது. கட்சி தலைமைதான் எடுக்க வேண்டும். உரிய நேரத்தில் அப்போது கட்சி முடிவு எடுத்து அறிவிக்கும். உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கட்சியின் தலைமை ஒப்புதலோடுதான் கட்டுரை வந்துள்ளதாக கூறியுள்ளார் என்று கூறுகிறீர்கள். அது அவருடைய கருத்தாக இருக்கலாம். கட்டுரை பிரசுரிக்கப்பட்டதால் மட்டுமே கூட்டணி என்று எடுத்துக்கொள்ள முடியாது. தேர்தல் வரும்போதுதான் அதுகுறித்து முடிவு செய்யப்படும். கட்டுரை எழுதுபவர்கள், தனிப்பட்ட முறையில் கட்சியின் முடிவை கூற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் அவரிடம், முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் 3 அமைச்சர்கள் பற்றிய பாலியல் சம்பந்தமான வீடியோ ஆதாரம் இருப்பதாக கூறி இருக்கிறாரே?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், “ஆதாரம் இருந்தால் உடனடியாக வெளியிடட்டும். சும்மா பூச்சாண்டி காட்ட வேண்டாம்” என்றார்.

Next Story