விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் கவர்னரை சந்தித்து மனு கொடுத்தனர்


விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் கவர்னரை சந்தித்து மனு கொடுத்தனர்
x
தினத்தந்தி 24 April 2018 9:00 PM GMT (Updated: 24 April 2018 9:00 PM GMT)

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை 9-வது அட்டவணையில் இணைக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.

சென்னை,

வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை செயலிழக்க செய்ய உடனடியாக அவசர சட்டம் இயற்ற வேண்டும். அந்த சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சென்னையில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணியாக செல்வதாக அறிவித்தனர்.

ஆனால் அதற்கு அனுமதி இல்லாததால், சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நேற்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி, இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பெ.ஜான்பாண்டியன், ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் எஸ்.டி.கல்யாணசுந்தரம் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு அளித்து இருக்கிற தீர்ப்பை உடனடியாக செல்லாததாக்க அவசர சட்டம் இயற்ற வேண்டும். எந்த காலத்திலும் நீதிமன்றம் சீண்டாதபடி அந்த சட்டத்தை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையில் இணைக்க வேண்டும்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உடனடியாக நடை முறைப்படுத்தி இருக்கிறார்கள். பா.ஜ.க. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை ஓட்டுக்காக நிறைவேற்றினார்கள். தற்போது சுப்ரீம் கோர்ட்டை தூண்டிவிட்டு அதை செயலிழக்க செய்து இருக்கிறார்கள்.

எங்களுடைய கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் ஒடுக்கப்பட்ட மக்கள் மாபெரும் சக்தி என்பதை நிலைநாட்டுவோம். வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்தால் தலித் மக்கள் சக்தி உள்நாட்டு யுத்தமாக மாறும். அம்பேத்கர் சொன்ன மக்கள் புரட்சி வெடிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சைதாப்பேட்டையில் நடந்த போராட்டத்தால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. போராட்டத்தின் முடிவில், கட்சி தலைவர்கள் கவர்னரை சந்திக்க புறப்பட்டனர். அவர்கள் பின்னால் தொண்டர்களும் ஊர்வலமாக சென்றனர்.

போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின்னர், திருமாவளவன் தொண்டர்களிடம் பேசி கலைந்து போக சொன்னார். இதனையடுத்து தொண்டர்கள் கலைந்து சென்றனர். அதைத்தொடர்ந்து கட்சி தலைவர்கள் கவர்னரை சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை கொடுத்தனர். 

Next Story