மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதை ஏற்க முடியாது’ எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்


மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதை ஏற்க முடியாது’ எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்
x
தினத்தந்தி 25 April 2018 3:00 AM IST (Updated: 25 April 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

மக்களின் வரிப்பணத்தை எடப்பாடி பழனிசாமி சுயவிளம்பரத்திற்காக வீணடிப்பதை ஏற்க முடியாது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் தமிழக அரசின் செய்தி விளம்பரத்துறை சார்பில் திரையிடப்படும் சாதனை விளக்க விளம்பரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏழுமலையானாக சித்தரிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. முதல்-அமைச்சராக பதவியேற்ற 15 மாதங்களில் மக்களின் நலனுக்காக எதையுமே செய்யாத எடப்பாடி பழனிசாமி கூச்சமின்றி இப்படி விளம்பரப்படுத்திக் கொள்வது கண்டிக்கத்தக்கது.

திரையரங்குகளில் இந்த விளம்பரத்தைப் பார்க்கும் மக்கள் நகைச்சுவையாகக் கருதி சிரிக்கிறார்கள் என்றாலும், இது ஒரு குரூரமான சிந்தனையாகும். மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாமல், சட்டப்பேரவை உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கி முதல்-அமைச்சரான எடப்பாடி பழனிசாமி, ஆட்சியில் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய அனைத்து நாகரிகங்களையும் காலில் போட்டு மிதித்துவிட்டு தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்கிறார்.

தமிழகம் ரூ.7 லட்சம் கோடி கடன் சுமையில் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் மக்களின் வரிப்பணத்தை சுயவிளம்பரத்திற்காக எடப்பாடி பழனிசாமி வீணடிப்பதை ஏற்கமுடியாது. திருப்பதி ஏழுமலையானாக தம்மைக் காட்டிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமியின் மலிவான செயல்களால், இறைவழிபாட்டில் நம்பிக்கைக் கொண்ட மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

மக்களை மட்டுமின்றி, கடவுளையும் அவமதிக்கும் வகையிலான விளம்பரப் படத்தை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் தாங்களாகவே வீதிகளில் இறங்கி போராடுவதை தவிர்க்க முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story