பி.டெக் பட்டதாரியை நிர்வாணமாக்கி தாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை
பி.டெக் பட்டதாரியை நிர்வாணமாக்கி தாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
புதுச்சேரி தானிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். பி.டெக் பட்டதாரியான இவர், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் சொந்தமாக டிராக்டர் வைத்துள்ளேன். இதன்மூலம் சிவகங்கை மாவட்டம் படமாத்தூரில் உள்ள சர்க்கரை ஆலைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கரும்பு ஏற்றி அனுப்பி வருகிறேன்.
கடந்த 2010-ம் ஆண்டு டிராக்டரில் கரும்பை ஏற்றி அனுப்பி வைத்து விட்டு சர்க்கரை ஆலை அருகே டிராக்டரை எதிர்பார்த்து காத்திருந்தேன். அந்த சமயத்தில், அங்கு வந்த அப்போதைய சிவகங்கை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் ஆகியோர் எந்த காரணமும் தெரிவிக்காமல் என்னை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் 5 நாட்கள் என்னை போலீஸ் நிலையத்தில் அடைத்து வைத்து நிர்வாணமாக்கி கம்பால் தாக்கினர் இதன்பின்பு, லாரியை திருடியதாக என் மீது பொய் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். எனவே, போலீஸ் அதிகாரிகள் இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
ஒழுங்கு நடவடிக்கை
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
குற்ற வழக்கில் ஒருவரை கைது செய்யும்போது என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு சுட்டிக்காட்டி உள்ள வழிமுறைகளை போலீஸ் அதிகாரிகள் இருவரும் மீறி உள்ளனர். ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை பார்க்கும் போது மனுதாரரை போலீஸ் அதிகாரிகள் 5 நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்து நிர்வாணமாக்கி தாக்கி இருப்பது தெரிகிறது.
எனவே, போலீஸ் அதிகாரிகள் இருவருக்கும் சேர்த்து ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மனுதாரருக்கு தமிழக அரசு வழங்கி விட்டு போலீஸ் அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ள வேண்டும். போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story